கோவை: அளவையில் குளறுபடி - தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்!
கோவை மாநகராட்சி 43-வது வார்டைச் சேர்ந்த காந்தி நகரைச் சேர்ந்த மல்லிகா என்பவர் தனது கணவர் புருஷோத்தமனுடன் ஆட்சியர் அலுவலகத்தின் முன் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.;

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது, கோவை மாநகராட்சி 43-வது வார்டைச் சேர்ந்த காந்தி நகரைச் சேர்ந்த மல்லிகா என்பவர் தனது கணவர் புருஷோத்தமனுடன் ஆட்சியர் அலுவலகத்தின் முன் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மல்லிகா கூறுகையில், விளாங்குறிச்சியில் எங்களுக்குச் சொந்தமான 271 சதுர மீட்டர் நிலம் உள்ளது. ஆனால், வருவாய்த்துறை ஆவணங்களில் அது 200 சதுர மீட்டர் என்று தவறாகப் பதிவாகியுள்ளது. இந்தத் தவறை சரி செய்யக்கோரி கடந்த 2022-ம் ஆண்டு முதல் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இந்த நில அளவை குளறுபடியை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று கண்ணீருடன் தெரிவித்தார். தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மல்லிகா மற்றும் அவரது கணவரிடம் ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.