பராமரிப்பு இல்லாத அரசு பேருந்துகள் தடம் எண் தெரியாமல் பயணியர் தவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து பொது மக்களுக்கு தடம் எண் தெரியும் வகையில் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்;

Update: 2025-04-09 02:41 GMT
பராமரிப்பு இல்லாத அரசு பேருந்துகள் தடம் எண் தெரியாமல் பயணியர் தவிப்பு
  • whatsapp icon
அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டம், காஞ்சிபுரம் மண்டலம் சார்பில், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு, அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பேருந்துகளில், பின்பக்கம் உள்ள தடம் எண் மற்றும் ஊர் பெயர் பெயர் பலகையை, பணிமனை ஊழியர்கள் முறையாக பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காஞ்சிபுரம் ஓரிக்கை பணிமனை எண் 1ஐ சேர்ந்த தடம் 79 என்ற அரசு பேருந்து காஞ்சிபுரம்- தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மதியம் 12:00 மணிக்கு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் வந்த இப்பேருந்தின் பின்பக்க கண்ணாடியில் அழுக்கு படிந்து பொலிவிழந்த நிலையில் உள்ளது. இதனால், போர்டில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்கள் தெளிவற்ற நிலையில் மங்கலாக இருந்தது இதனால், பயணியரால் தெளிவாக அறிந்துகொள்ள முடியவில்லை. இதேபோல், காஞ்சிபுரம் - பூந்தமல்லி இடையே இயக்கப்படும் தடம் எண் 76 சி என்ற பேருந்தின் பின்பக்கம் உள்ள பெயர் பலகை சரியாக பொருத்தப்படவில்லை. இதனால், போர்டில் இருந்த தடம் எண், ஊர் பெயரை பயணியர் முழுமையாக படிக்க முடியவில்லை. இப்பேருந்களில் பயணிக்க வேண்டிய பயணியர், பேருந்தை தவற விட்டு விடுகின்றனர். எனவே, காஞ்சிபுரம் மண்டலம் சார்பில், இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் ‛ரூட் போர்டு' எனப்படும், தடம் எண் மற்றும் ஊரின் பெயர் பலகையில் உள்ள எழுத்துக்களை தெளிவாக எழுதி, பொலிவிழந்த கண்ணாடியை அகற்றி விட்டு, புதிய கண்ணாடி அமைத்து, பெயர் பலகையை முறையாக பராமரிக்க காஞ்சிபுரம் மண்டல அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.

Similar News