குனியமுத்தூரில் பயங்கர மோதல்- வாலிபர் கத்திக்குத்துக்கு பலி !
குனியமுத்தூர் டைமண்ட் அவென்யூ பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட பயங்கர மோதலில் சுண்ணாம்பு காளவாய் பகுதியைச் சேர்ந்த வாலிபர் அசாருதீன் கத்திக்குத்துக்கு இலக்காகி பரிதாபமாக உயிரிழந்தார்.;

கோவை, குனியமுத்தூர் டைமண்ட் அவென்யூ பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட பயங்கர மோதலில் சுண்ணாம்பு காளவாய் பகுதியைச் சேர்ந்த வாலிபர் அசாருதீன் கத்திக்குத்துக்கு இலக்காகி பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அசாருதீன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஏற்பட்ட விபத்து காரணமாக அவரது நண்பர்களுக்கும், விபத்தை ஏற்படுத்திய எதிர் தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இரு தரப்பினரும் சமாதானப்படுத்தப்பட்டதாக தெரிகிறது. மேலும், இரு தரப்பினருக்கும் இடையே கொடுக்கல், வாங்கல் பிரச்சினையும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு இரு தரப்பினரும் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பில் ஈடுபட்டனர். அப்போது, எதிர் தரப்பினர் கத்தியால் சரமாரியாக குத்தியதில் படுகாயமடைந்த அசாருதீன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து நான்கு பேரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.