தமிழ் இலக்கிய உலகுக்கு மிகப்பெரிய இழப்பு - குமரி அனந்தன் மறைவுக்கு ஜி.கே.வாசன் புகழஞ்சலி

இலக்கியச் செல்வர் குமரி அனந்தனின் மறைவு தமிழகத்திற்கும், தமிழ் இலக்கிய உலகுக்கும் மிகப்பெரிய இழப்பு என்று ஜி.கே.வாசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.;

Update: 2025-04-09 18:25 GMT
தமிழ் இலக்கிய உலகுக்கு மிகப்பெரிய இழப்பு - குமரி அனந்தன் மறைவுக்கு ஜி.கே.வாசன் புகழஞ்சலி
  • whatsapp icon
குமரி அனந்தனின் மறைவுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழக மூத்த அரசியல்வாதி, இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் உடல்நிலைக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். குமரிஅனந்தன் பெருந்தலைவர் காமராஜர் மீது மிகுந்த பற்றுக்கொண்டவர். சிறுவயதிலேயே பெருந்தலைவரால் ஈர்க்கப்பட்டு தன்னை அரசியலில் ஈடுபடுத்திக்கொண்டவர். தனது அரசியல் பணியாலும், மக்கள் பணியாலும், ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் சிறப்பாக பணியாற்றி, தான் சார்ந்த தொகுதிக்கும், தமிழகத்திற்கும் பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தவர். இலக்கியச் செல்வா் குமரி அனந்தன் தமிழின் மீது தீராத பற்றுக்கொண்டவர். தமிழ் இலக்கியத்தில் மிகுந்த புலமை பெற்றவா். இவரது இலக்கிய பேச்சாற்றலால் அனைவராலும் இலக்கியச் செல்வர் என்று அன்போடு அழைக்கப்பட்டார். பல்வேறு நூல்களை இயற்றியவர். நாடாளுமன்றத்தில் தமிழில் கேள்விக் கேட்கவும், தமிழில் மணியார்டர் அனுப்பவும், தமிழில் தந்தி அனுப்பவும் போராடி வெற்றிக் கண்டவர். குமரி அனந்தன் நதிகளை இணைக்க வேண்டும், பாரதமாதாவுக்கு தருமபுரியில் கோயில் கட்டவேண்டும் என்று பல்வேறு உயா்ந்த கொள்கைகளுக்காக பல்வேறு முறை நடைபயணம் மேற்கொண்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, மத்திய, மாநில அரசுக்கும் உணா்த்தியவர். மக்கள் தலைவா் மூப்பனார் மீது மிகுந்த அன்பு கொண்டவர் நட்புக்கொண்டவர். இலக்கியச் செல்வரின் மறைவு தமிழகத்திற்கும், தமிழ் இலக்கிய உலகுக்கும் மிகப்பெரிய இழப்பாகும். குமரி அனந்தனை இழந்துவாடும் அவர்களது குடும்பத்திற்கும், அவர்களது அன்பு மகள் முன்னாள் ஆளுநர் டாக்டா் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் ஆழ்ந்த இரங்கலை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Similar News