கோவை: அமேசான் குடோனில் தரமற்ற பொருட்கள் பறிமுதல் !
அமேசான் குடோனில் ஆன்லைன் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 95 லட்சம் ரூபாய் மதிப்பிலான தரச் சான்று இல்லாத பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.;
இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (BIS) அதிகாரிகள் நேற்று கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள அமேசான் நிறுவனத்தின் குடோனில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், ஆன்லைன் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 95 லட்சம் ரூபாய் மதிப்பிலான தரச் சான்று இல்லாத பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் தண்ணீர் பாட்டில்கள், காற்றாடி, பொம்மைகள், குழந்தைகளுக்கான டயாபர், வாட்டர் ஹீட்டர், சிசிடிவி கேமராக்கள் மற்றும் காலணிகள் உட்பட சுமார் 4500 பொருட்கள் அடங்கும். இந்த பொருட்கள் அனைத்தும் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் தரச் சான்று பெறாமல் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பேசிய BIS அதிகாரிகள், வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் போது அவற்றின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். குறிப்பாக, ஐஎஸ்ஐ முத்திரை உள்ளதா என்பதை சரிபார்ப்பது அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். மேலும், பொருட்களின் பதிவுச் சான்றிதழ் மற்றும் தரத்தை வாடிக்கையாளர்கள் உறுதி செய்ய BIS Care என்ற மொபைல் செயலியை பயன்படுத்தலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.