கோவை: கால் டாக்ஸி சுவரில் மோதி விபத்து - ஓட்டுநர் பலி !
ஆம்னி வேன் கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்ட விபத்தில் ஓட்டுனர் பலி.;
கோவை சின்னத்தடாகம் திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் செல்வராஜ் (வயது 55), சொந்தமாக ஆம்னி வேன் வைத்து கால் டாக்ஸி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். நேற்று செல்வராஜ் பன்னிமடையில் இருந்து தடாகம் நோக்கி தனது ஆம்னி வேனில் சென்று கொண்டிருந்தார். அப்போது வரப்பாளையம் பிரிவு அருகே எதிர்பாராத விதமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த சுற்றுச்சுவரில் வேகமாக மோதியது. இந்த விபத்தில் செல்வராஜின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சாய்பாபா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.