திமுக பெண் கவுன்சிலர் மீது நடவடிக்கை: பாஜக கோரிக்கை!
தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக திமுக பெண் கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;

தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக திமுக பெண் கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தலைமையில், ஓபிசி அணி துணை தலைவர் விவேகம் ரமேஷ் முன்னிலையில் நிர்வாகிகள் டவுன் ஏஎஸ்பி மதனிடம் அளித்த மனுவில் "தூத்துக்குடி மாநகராட்சி 26-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மரிய கீதா என்பவரின் மகன் ஜெர்சன் கஞ்சா வைத்திருந்ததாக மட்டக்கடை பகுதியில் வைத்து தனிப்படை காவல்துறையினரால் நேற்று இரவு கஞ்சா மற்றும் ஆயுதங்களுடனும், இருசக்கர வாகனத்துடனும் பிடிக்கப்பட்டு, வடபாகம் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்த விபரம் அறிந்து அவருடைய தாயாரான மரிய கீதா தன்னுடைய ஆதரவானவர்களுடன் கூட்டமாக வந்து தன்னுடைய மகனை உடனே விடுதலை செய்ய வேண்டுமென பிரச்சனைகள் செய்ததோடு, அங்கிருந்த காவல்துறை வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளார். இது சம்பந்தமாக வடபாகம் காவல்நிலைய கண்காணிப்பு கேமரா பதிவுகளை உடனே ஆய்வு செய்து, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மரிய கீதா மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.