கோவை: பட்டப்பகலில் தொடரும் செல்போன் திருட்டு !

பட்டப் பகலில் வீடு புகுந்து செல்போன் திருடும் நபரின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு.;

Update: 2025-04-11 01:30 GMT
கோவை மாநகரப் பகுதியில் வீடுகளில் புகுந்து திருடும் சம்பவங்கள் குறைந்திருந்த நிலையில், கவுண்டம்பாளையம் பகுதியில் மீண்டும் தைரியமாக பட்டப்பகலில் வீடுகளுக்குள் நுழைந்து செல்போன்கள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கவுண்டம்பாளையம் பேங்க் ரோடு வீதியில் சக்திதாசன் என்பவரது வீட்டிலும், அருகிலுள்ள மற்றொரு வீட்டிலும் மர்ம நபர் ஒருவர் சாதாரணமாக நுழைந்து அங்கிருந்த செல்போன்களை திருடிச் சென்றுள்ளார். அடுத்தடுத்த வீடுகளில் திருட்டு நடந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். சக்திதாசன் தனது வீட்டின் எதிரே இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர் ஒருவர் முதலில் அப்பகுதியில் சாதாரணமாக நடந்து செல்வது போல் நோட்டமிடுவதும், பின்னர் திறந்து கிடந்த காம்பவுண்டுக்குள் நுழைந்து செல்போன்களை திருடிச் செல்வதும் தெளிவாக பதிவாகியுள்ளது. அந்த நபர் யார் என்று அப்பகுதியில் யாருக்கும் தெரியாததால், மேலும் திருட்டு சம்பவங்கள் நடைபெறலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதையடுத்து, சக்திதாசன் கண்காணிப்பு கேமரா காட்சிகளுடன் கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News