அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்

கால்நடை வளர்க்க விரும்பும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு கறவைமாடுகள் வாங்குவதற்கு வங்கிக் கடன் உதவி வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார்.;

Update: 2025-04-11 01:48 GMT
அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்
  • whatsapp icon
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், பன்னம்பாறை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் வருவாய்த்துறை, மாவட்ட தொழில் மையம், வேளாண்மை மற்றும உழவர் நலத்துறை, தோட்டக்கலைத் துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, கூட்டுறவுத்துறை போன்ற அரசுத்துறைகள் சார்பில் 97 பயனாளிகளுக்கு ரூ.53,11,553 மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமிற்கு திரளாக வந்திருக்கக்கூடிய ஊர் பொதுமக்களே ஊடக நண்பர்களே அனைவருக்கும் எனது இனிய காலை வணக்கம். தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பிறந்த குழந்தைகள் முதல் அனைத்துத்தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அரசுத்துறைகளின் வாயிலாக பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாதந்தோறும் மாவட்ட தலைநகரிலிருந்து மிகவும் தொலைதூரத்தில் உள்ள கிராமத்தினை தெரிவு செய்து அக்கிராமத்திற்கு அரசு இயந்திரங்கள் நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, அரசுத்துறைகள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் எடுத்துரைக்கப்படுகிறது. மேலும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று அவற்றை பரிசீலனை செய்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மக்கள் தொடர்பு முகாமினை முன்னிட்டு பொதுமக்களிடமிருந்து முன்னோடி மனுக்கள் பெறப்பட்டு, அவற்றை பரிசீலனை செய்து தகுதியான மனுதாரர்களுக்கு அவர்களுக்குரிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்று பல்வேறு விதமான குறைதீர்ப்பு நடவடிக்கைகளை நமது அரசு எடுத்து வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு திங்கள்கிழமையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தின கோரிக்கை மனுக்களை பெறக்கூடியது. கடந்து ஒரு ஆண்டாக நடைபெறக்கூடிய உங்களைத்தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தாலுகாவை தேர்ந்தெடுத்து அந்த பகுதியில் உள்ள முக்கிய இடங்களிளெல்லாம் ஆய்வு செய்து அங்கும் மனுக்களை பெறக்கூடிய திட்டம், அதன்பிறகு முதலமைச்சர் அவர்களுடைய ஒரு உன்னத திட்டமான மக்களுடன் முதல்வர் முகாம்களை அமைத்து அதன்மூலம் மனுக்களை பெறக்கூடிய திட்டம். இப்படி பல்வேறு வகையான திட்டங்களின் மூலம் மக்களினுடைய கோரிக்கை மனுக்களைப் பெற்று அதற்கான உகந்த தீர்வுகளை நமது அரசுத்துறை அலுவலர்கள் செய்து வருகிறார்கள். இதில் அதிகமான கோரிக்கை மனுக்கள் வரக்கூடிய துறைகளைச் சேர்ந்தவர்கள் விரைவாகவும், சரியான தீர்வும் கொடுக்க வேண்டும். குறிப்பாக வருவாய்த்துறையில் அதிகமான கோரிக்கை மனுக்கள் பெறப்படுகிறது. இந்த மனுக்கள் அனைத்தையும் வட்டாட்சியர், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் ஆகிய அனைவரும் சரியான முறையில் ஆய்வு செய்து உரிய தீர்வுகளை அந்த மனுதாரருக்கு வழங்க வேண்டும். அதனடிப்படையில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அவற்றை பரிசீலனை செய்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மக்கள் தொடர்பு முகாமினை முன்னிட்டு பொதுமக்களிடமிருந்து முன்னோடி மனுக்கள் 102 பெறப்பட்டு, அவற்றை முழுமையாக பரிசீலனைசெய்து அதில் 68 மனுக்கள் ஏற்பளிக்கப்பட்ட வகையிலும், அதற்கு பின்னர் பன்னம்பாறை கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்து தகுதியான வகையிலும் என மொத்தம் 97 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் இன்றையதினம் வழங்கப்படவுள்ளது. தகுதியின்மை காரணமாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ள மனுக்களின் மனுதாரர்களுக்கு எதற்காக மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்படும். அதன்படி, இன்றைய மக்கள் தொடர்பு முகாமில், மொத்தம் 97 பயனாளிகளுக்கு ரூ.53,11,553 மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், பொதுமக்கள், அரசின் திட்டங்கள் குறித்து அறிந்து பயன்பெறும் வகையில் பல்வேறு துறைகளின் திட்ட விளக்கக் கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பொதுமக்களாகிய நீங்கள் அரங்குகளை பார்வையிட்டு தங்களது தொழில் மற்றும் வாழ்க்கையை மேம்படுத்தி கொள்வதற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சார்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு பொது மருத்துவ பரிசோதனை, கண் பரிசோதனை ஆகியவை செய்யப்படுகிறது. பொதுமக்கள், பெரியோர்கள் எல்லோரும் இந்த முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நடமாடும் மருத்துவமனை வாயிலாக மருத்துவர்களிடம் பரிசோதனைகளை செய்து கொள்ளலாம். இம்மருத்துவ முகாமில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் தொடர்பான நோய்கள் கண்டறியப்படுபவர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மருத்துவர்களிடம் முறையாக கேட்டறிந்து தொடர்ந்து மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நமது தமிழ்நாடு முதலமைச்சர் சமீபத்தில் முதல்வர் மருந்தகம் என்று ஒரு திட்டத்தை தொடங்கி வைத்தார். முதல்வர் மருந்தகம் என்பது மலிவான விலையில் அதாவது, 20% முதல் 90% வரை குறைவான விலையில் மருந்துகள் கிடைப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும். மருந்துகளை எல்லாம் அரசே நேரடியாக கொள்முதல் செய்து கூட்டுறவுத் துறையின் மூலமாக மருந்தகங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. B.Pharm/ D.Pharm சான்று பெற்றவர்களும் மருந்தகங்களை செயல்படுத்தும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு குடும்பத்தில் ஒரு மாதத்திற்கு 1000 ரூபாய்க்கு மேல் மருந்துகள் வாங்குகிறீர்கள் என்றால், இப்பொழுது முதல்வர் மருந்தகங்களில் அந்த மருந்துகளை 300 ரூபாய்க்கு வாங்கி விட முடியும். எனவே, தங்கள் பகுதிகளில் உள்ள முதல்வர் மருந்தகங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு நேரில் சென்று மருத்துவ சேவை அளிக்கப்பட்டு, மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பன்னம்பாறை கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பொறுத்தவரையில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்புத் தொழில் அதிகளவில் உள்ளது என அறிகிறேன். கால்நடை வளர்ப்போர்களின் வாழ்வாதாரத்தை மேலும் மேம்படுத்தும் விதமாக பல்வேறு திட்டங்கள் தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டுவருகிறது. குறிப்பாக, கால்நடை வளர்க்க விரும்பும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு கறவைமாடுகள் வாங்குவதற்கு வங்கிக் கடன் உதவி வழங்க தயாராகவுள்ளோம். விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தங்களுடைய சுய உதவிக்குழு அல்லது ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு வழியாக விண்ணப்பிக்கலாம். பொதுவாக ஒரு கிராமப் பொருளாதரத்தில் விவசாயம் தான் மிக முக்கியமான வருமான ஆதாரமாக இருக்கும். ஆனால் அதைவிட அதிகமான வருமானம் தரக்கூடிய ஆதாரமாக கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயம் சார்ந்த பிற தொழில்களாகும். ஒரு குடும்பத்தில் இரண்டு கறவைமாடுகள் இருந்தால் போதும். அந்த குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளக்கூடிய வகையில் அதிலிருந்து வருமானம் கிடைக்கும். மேலும், ஏற்கனவே கால்நடை வளர்த்து வந்தாலும் தங்களது தொழிலை மேலும் அபிவிருத்தி செய்துகொள்ளும் வகையில் ரூ.50,000 வரையிலான கடனுதவிகள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கூடுதலாக பால் உற்பத்தியை பெருக்கலாம். அதேபோன்று ஐந்து முதல் ஆறு ஆடுகள் வாங்குவதற்கு ரூ.40,000 வரையிலான வங்கிக் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்தொழிலில் செலுத்தியுள்ள முதலீட்டை மிகவும் குறுகிய காலத்தில் இரட்டிப்பாக்கக்கூடிய ஒரு தொழில் ஆடு வளர்ப்புத் தொழில். எனவே விருப்பமுள்ளவர்கள் மகளிர் சுய உதவிக்குழு வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம். அதேபோல், கோழி வளர்ப்பிற்கும் ரூ.15,000 வரையிலான கடனுதவி வழங்கப்படுகிறது. கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் வங்கிக் கடனுதவி பெற்று பயன்பெறலாம். அதுமட்டுமல்லாமல் கால்நடை வளர்ப்பு, பராமரிப்பு, கொள்முதல் செய்யும் முறை, இலாபகரமான விற்பனை, சத்துமிகுந்த தீவன ஊட்ட முறை உள்ளிட்டவை குறித்து உரிய பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக கால்நடை பராமரிப்புத்துறை, மகளிர் திட்டம், ஆவின் நிறுவனம் மற்றும் கூட்டுறவுத்துறை ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து கூட்டுறவுத்துறையின் வழியாக நமது மாவட்டத்தில் மட்டும் முன் முயற்சி எடுத்துள்ளோம். இதில் எந்த அளவிற்கு மகளிர்கள் அதிகளவில் பயன்பெற்று வெற்றிகரமான திட்டமாக மாற்றுகிறீர்களோ அதன் மூலமாக உங்களுடைய வருமானம் தற்போது உள்ள நிலையிலிருந்து ஒரு மடங்கு உயர்வதற்கான வாய்ப்பு வசதிகள் உள்ளன. எனவே, அனைத்து மகளிர்களும் நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இத்திட்டத்தில் முதற்கட்டமாக 2000 மாடுகள், 10000 ஆடுகள் மற்றும் 10000 கோழி வளர்ப்பிற்கு பயனாளிகளை தேர்வு செய்து, கடனுதவிகள் வழங்க இலக்கு நிர்ணயித்து செயல்படுத்தி வருகிறோம். இதனை மேலும் ஒரு மடங்கு உயர்த்துவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறைந்தபட்சம் 27,000 மகளிர்களுக்கு இந்த மாதிரியான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு நிதிகள் எல்லாம் வழங்கி செயல்படுத்துவதற்கு தயார் நிலையில் இருக்கிறோம். விவசாயிகள் அனைவரும் விவசாயம் சார்ந்த மானியங்கள் பெறுவதற்கும், விவசாயம் சார்ந்த நலத்திட்டங்களில் பயன் பெறுவதற்கும் பிரதம மந்திரி கௌரவ நிதி உதவித்திட்டத்தில் ஆதார் அட்டை, நிலப்பட்டா, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண் போன்ற ஆவணங்களை கொண்டு சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த பதிவினை மேற்கொள்ளுவதன் மூலமாக வருங்காலங்களில் மேற்கண்ட திட்டத்தில் பயன்பெற முடியும். எனவே அனைத்து விவசாயிகளும் வேளாண்மைத் துறையின் மூலம் செயல்படுத்தக்கூடிய விவசாயிகள் நில உடைமைப் பதிவுகளில் தங்களை இணைத்து பதிவு செய்து கொள்ள வேண்டும். வெளியூரில் வசிக்கக்கூடிய விவசாயிகளுக்கும் இதுகுறித்த தகவலை தெரிவித்து உடனடியாக அவர்களையும் பதிவு செய்ய அறிவுறுத்துமாறு விவசாயிகளை கேட்டுக்கொள்கிறேன். எனவே, அரசின் பல்வேறு துறை சார்பில் ஒருங்கிணைந்து செயல்படுத்தக்கூடிய இதுபோன்ற நிகழ்வுகளில் இருக்கக்கூடிய அனைத்து நலத்திட்டங்களையும் அனைவரும் பயன்படுத்திக்கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாறன், இணை இயக்குநர் (வேளாண்மை) பெரியசாமி, சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பென்னட்ஆசிர், மாவட்ட சுகாதார அலுவலர் யாழினி, சாத்தான்குளம் வட்டாட்சியர் இசக்கி முருகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News