உச்சநீதிமன்றம் அளித்தது சிறப்புமிக்க தீர்ப்பு எம்பி பேட்டி
உச்சநீதிமன்றம் அளித்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு,தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி பேட்டி;
தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வக்கீல் ஆ.மணி இன்று நாடாளுமன்ற அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது, 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் உச்சநீதிமன்றம் அளித்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாகும். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் எழுப்பும் குரல், கூச்சல் அல்ல அது உரிமைக் குரல். நிராகரிக்க முடியாத தெளிவான வியூகங்களோடுகூடிய குரல் என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பு வாயிலாக நிரூபணமாகியுள்ளது. மாநில உரிமைகள் விஷயத்தில் நாடாளுமன்றம், நீதிமன்றம் என தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு நகர்விலும் சமரசமே கிடையாது என்பதை முதல்வர் நிரூபித்து வருகிறார். முதல்வர் தனது சட்டப்போராட்டத் தால் மீட்டெடுத்த 10 மசோதாக்களில் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதா பெயரை வைக்கும் மசோதாவும் ஒன்று. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அந்த மசோதாவையும் பாதுகாத்ததன் மூலம் கட்சி எல்லைகளை கடந்து உண்மையான தலைவர் என்று நிரூபித்திருக்கிறார் தமிழக முதல்வர். ஒன்றியத்தை ஆட்சி செய்யும் கட்சி தான் கூட்டாட்சி தத்துவத்தை காக்க வேண்டும். இருந்தாலும், நாட்டின் கூட்டாட்சி கொள்கையை முதல்வர் தான் வலுப்படுத்திக்கொண்டிருக்கிறார். தற்போது டெல்லியின் அதிகாரத்தை பாஜக கைப்பற்றி வைத்திருக்கலாம். ஆனால் அந்த கட்சி வழிநடத்தும் ஒன்றிய அரசு நிகழ்த்தும் அநீதிகளுக்கு எதிராக பிற மாநிலங்களுடன் இணைந்து தீவிரமாக களமாடுவதை முதலமைச்சர் வழிநடத்திக்கொண்டிருக்கிறார். ஆளுநர் மூலம் ஒன்றிய ஆட்சியாளர்கள் செய்த சர்வாதிகாரத்தை தடுத்து மாநில உரிமையை நிலைநாட்டியுள்ளார் முதல்வர் முக ஸ்டாலின். மாநில நலனுக்காக திமுக செயல்படுகிறது என்பதற்கு இதைவிட வேற என்ன உதாரணம் தேவை.கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நடைபெற்ற திமுக பவள விழா மாநாட்டில் பேசிய முதல்வர், "எல்லா அதிகாரமும் கொண்டவையாக மாநில அரசுகளை மாற்றும் வகையில், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முயற்சிக்கும் சட்ட முன்னெடுப்புகளை திமுக நிச்சயமாக, உறுதியாகச் செய்யும்' என்று அறிவித்த 6 மாதங்களில் அதற்கான முதல் வெற்றியைப் பெற்றுள்ளார்.