கோவை: கழிவறையில் பெயிண்ட் அடித்த மாணவர் - வைரலாகும் வீடியோ!

கோவை கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தின் உக்கடம் பணிமனையில் தொழில்நுட்ப பயிற்சிக்கு வந்த மாணவர் ஒருவரை கழிவறையில் பெயிண்ட் அடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2025-04-12 02:19 GMT
கோவை கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தின் உக்கடம் பணிமனையில் தொழில்நுட்ப பயிற்சிக்கு வந்த மாணவர் ஒருவரை கழிவறையில் பெயிண்ட் அடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பணிமனையில் 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொழில்நுட்ப பயிற்சி பெற்று வருகின்றனர். பேருந்துகளின் பராமரிப்பு, பழுது நீக்கம், உதிரி பாகங்கள் மாற்றுதல் மற்றும் இன்ஜின் பழுதுகளை சரிசெய்தல் போன்ற முக்கிய தொழில்நுட்ப விஷயங்களில் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். ஆனால், பயிற்சிக்கு வந்த மாணவர்களுக்கு கழிவறையில் வெள்ளை அடித்தல், சுத்தம் செய்தல் மற்றும் அதிகாரிகளின் அறைகளை சுத்தம் செய்தல் போன்ற பணிகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், மாணவர் ஒருவர் கழிவறைக்கு வெள்ளை அடிக்கும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை எடுத்த அரசு போக்குவரத்து கழகத்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள், இதனை தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்கள் இடம்பெற்றுள்ள வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் குழுக்களில் நேற்று பதிவேற்றம் செய்துள்ளனர். தொழில்நுட்ப பயிற்சிக்கு வந்த மாணவரை இதுபோன்ற பணிகளில் ஈடுபடுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News