ஆத்தூர் சோமநாத சுவாமி கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம்!
ஆத்தூரில் சோமநாத சுவாமி கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.;
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆத்தூரில் சோமநாத சுவாமி கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் ஒன்பது காலை, மாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை காட்டப்பட்டு வந்தது. தொடர்ந்து சுவாமி அம்பாள் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவு சமய சொற்பொழிவு, பக்தி கச்சேரி, இன்னிசை கச்சேரிகள் நடைபெற்று வந்தது. விழாவின் சிகரநிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று விமரிசையாக நடந்தது. இதையொட்டி காலை 5.30 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. காலை 8 மணிக்கு சுவாமி, அம்பாள் தேரில் அருள்பாலித்தனர். காலை 8.30 மணிக்கு விநாயகர் தேர் புறப்பட்டது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் தேரை கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் கரகோஷத்துடன் வடம்பிடித்து இழுத்தனர். பக்தர்களின் கரகோஷத்துடன் தேர் 4 ரத வீதிகள் வழியாக சென்றது. வழிநெடுகிலும் தேரில் வீற்றிருந்த சுவாமி, அம்பாளை பக்தர்கள் திரண்டிருந்து வழிபட்டனர். காலை 10.30 மணிக்கு தேர் நிலையை சென்றடைந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். காலை 11 மணியளவில் கோவில் அருகில் அன்னதானம் நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு தெப்ப திருவிழா நடைபெற்றது.