சிறுவர் பூங்காவை சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை
சிறுவர் பூங்காவை சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை;
அச்சிறுபாக்கம் பேரூராட்சி, 15 வார்டுகளை உள்ளடக்கியது.இதில், 5வது வார்டு ராவத்தநல்லுார் வி.ஐ.பி., நகரில், 'அம்ருத்' திட்டத்தின் கீழ், 2022 - 23ல், 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்காவில் சிமென்ட் கல் நடைபாதை, முதியவர்கள் அமரும் வகையில் இருக்கைகள், சிறுவர்களுக்கான ஊஞ்சல், சறுக்கு விளையாடுதல் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. ஆழ்துளைக் கிணறு அமைத்து, குடிநீர் 'மினி டேங்க்' மற்றும் கண்காணிப்பு கேமராக்கள், மின் விளக்கு உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டன.கடந்தாண்டு பெய்த பருவ மழை காரணமாக, இப்பகுதியில் சேகரமாகும் மழைநீர், பூங்கா வளாகம் முழுதும் தேங்கி, குளம் போல் மாறியது. தாழ்வான பகுதியில் இந்த பூங்கா அமைக்கப்பட்டதால் மழைநீர் தேங்கி, இரும்புக் கம்பிகளாலான விளையாட்டு சாதனங்கள் வீணாகின. இரண்டு மாதங்களுக்கு சேறும் சகதியுமாக காணப்பட்டது. தற்போது, இந்த சிறுவர் பூங்கா பயன்பாடின்றி செடி, கொடிகள் வளர்ந்து ஆக்கிரமித்து உள்ளன. பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால், 32 லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்ட இந்த சிறுவர் விளையாட்டு பூங்கா பொலிவிழந்து வருகிறது. எனவே, பேரூராட்சி அதிகாரிகள் இந்த சிறுவர் பூங்காவை ஆய்வு செய்து, முறையாக பராமரிக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.