கல்விக்கடன் தேவைப்படும் திருநங்கைகளுக்கு கடனுதவிகள் வழங்க நடவடிக்கை
கலெக்டர் பிருந்தாதேவி தகவல்;
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் திருநங்கைகள் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கினார். இதில் கேக் வெட்டிய திருநங்கைகள் கலெக்டருக்கு ஊட்டினர். விழாவில் கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது:- சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டு அவர்களுக்கு அடையாள அட்டை, ஆதார் அட்டை திருத்தம், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மருத்துவ காப்பீட்டு அட்டை பெற வழிவகை செய்யப்பட்டது. கல்விக்கடன் தேவைப்படும் திருநங்கைகளுக்கு உடனடியாக கடனுதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குறிப்பாக திருநங்கைகள் சுயதொழில் தொடங்குவதற்கென மாவட்ட தொழில் மையத்தின் மூலம் கடனுதவிகள் வழங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். விழாவில் 20 திருநங்கைகளுக்கு ரூ.2 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் மயில், துணை கலெக்டர் மாருதிபிரியா, மாவட்ட சமூக நல அலுவலர் கார்த்திகா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சிவகுமார், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் செந்தில்குமார், சேலம் திருநங்கைகள் நலச்சங்க தலைவர் பூஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.