உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம், மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்ட மருத்துவர் ச.உமா, பரமத்தி வேலூர் வட்டத்தில் அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு.;
நாமக்கல் மாவட்ட மருத்துவர் ச.உமா, இன்று நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 23-11-2023 அன்று அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை அறிவித்தார்கள். அதன்படி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் பரமத்தி வேலூர் வட்டம், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், இருக்கூர் மற்றும் பெரிய சோளிபாளையம் ஆகிய அங்கன்வாடி மையங்களில் வருகை தரும் மொத்த குழந்தைகளின் எண்ணிக்கை, குழந்தைகளுக்கு வழங்கப்படும் இணை உணவுகள், உணவுப் பொருட்களின் இருப்பு, தரம் ஆகியவை குறித்தும், குழந்தைகளின் வயதிற்கேற்ற எடை, உயரம், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், போஷான் செயலியில் குழந்தைகளின் தரவுகள் பதிவேற்றம் செய்யப்படுவது குறித்தும் அங்கன்வாடி பணியாளரிடம் கேட்டறிந்து, அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்க தயார் செய்யப்பட்டிருந்த மதிய உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இருக்கூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஸ்மார்ட் வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு, மாணவ, மாணவியர்களின் கற்றல் திறன், பள்ளியில் பயிலும் மொத்த மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடு, அடிப்படை வசதிகள், குடிநீர் வசதி குறித்து ஆய்வு மேற்கொண்டு, இருக்கூரில் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடையில் உணவுப்பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இருக்கூர் நியாய விலை கடையில் பொது விநியோகத் திட்டத்தின் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களின் தொகுப்பான உணவு தானியங்கள், மண்ணெண்ணெய், சர்க்கரை, பருப்பு, மசால் பொருட்கள் தரம், பயன்பெறும் மொத்த குடும்ப அட்டைதாரர்கள் விபரம் உள்ளிட்ட குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, விவசாய நிலத்தில் மகாகனி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதை பார்வையிட்டு நடவு செய்யப்பட்டுள்ள மொத்த மரக்கன்றுகள் எண்ணிக்கை, மொத்த பரப்பளவு குறித்தும், மற்றொரு விவசாயி அரசு மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்து பயிர் சாகுபடி செய்து வருவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினார். கபிலக்குறிச்சியில் செயல்பட்டு வரும் முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள மொத்த முதியோர்கள் எண்ணிக்கை, வயது விபரம், தினசரி வழங்கப்படும் உணவு விபரம், படுக்கை வசதி, மின்சார வசதி மற்றும் கழிப்பறை வசதி உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டு, முதியோர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ வசதிகள் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்து, தங்கியுள்ள முதியோர்களிடம் தாங்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களுக்கு தேவையான வசதிகள் குறித்தும் கலந்துரையாடினார்.திடுமல் ஊராட்சியில் வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில், சூரிய கூடார உலர்த்தி அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, சூரிய கூடார உலர்த்தியின் பயன்பாடுகள் குறித்து பயனாளிகளிடம் கேட்டறிந்தார். பெரிய சோளிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, சுற்றுப்புறத் தூய்மை உள்ளிட்டவை குறித்தும், மாணவ, மாணவியர்களின் கற்றல் திறன் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, அரசு துணை சுகாதார நிலையத்தில் தினசரி புறநோயாளிகள் எண்ணிக்கை, மகப்பேறு சிகிச்சை விபரம், மருந்துகளின் இருப்பு, வருகை பதிவேடு, ஆய்வக பதிவேடு ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.பெரிய சோளிபாளையத்தில் மண்புழு உரக்கூடத்தை பார்வையிட்டு மண்புழு உரம் தயாரிக்கும் முறை, உரம் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள், விவசாயத்திற்கு பயன்படுத்தபடும் உரத்தின் அளவு உள்ளிட்டவை குறித்தும், பெரிய சோளிபாளையத்தில் கிராம நிர்வாக அலுவலத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, குரும்பலமகாதேவி கிராமத்தில் தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு சாலையின் நீளம், அகலம், சாலை அமைக்க பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம், நிர்ணயிக்கப்பட்ட ஒப்பதகாலம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திடும் வகையில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், பரமத்தி வேலூர் வட்டத்தில், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான பல்வேறு துறைகள் சார்ந்த உயர் அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்கள்.