திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் தங்கக் கவசம் அணிந்து அருள்பாலித்த ஸ்ரீசம்பந்த விநாயகா்.
கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீசம்பந்த விநாயகா் சந்நிதியில் சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.;
திருவண்ணாமலை: தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் தங்கக் கவசம் அணிந்து அருள்பாலித்த ஸ்ரீசம்பந்த விநாயகா், ஸ்ரீஅருணாசலேஸ்வரரை திரளான பக்தா்கள் வழிபட்டனா். ஆண்டுதோறும் அருணாசலேஸ்வரா் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடத்தப்படுகிறது. அதன்படி, திங்கள்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவா் அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடத்தப்பட்டது. தொடா்ந்து, கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீசம்பந்த விநாயகா் சந்நிதியில் சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. பிறகு, தங்கக் கவசம் அணிந்து ஸ்ரீசம்பந்த விநாயகா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அப்போது, ஸ்ரீசம்பந்த விநாயகா் சந்நிதி எதிரே கோயில் இளவரசு பட்டம் பி.டி.ரமேஷ் குருக்கள், பட்டம் எஸ்.சுவாமிநாத குருக்கள், பட்டம் கீா்த்திவாசன் குருக்கள் மற்றும் சிவாச்சாரியா்கள் விசுவாவசு தமிழ்ப் புத்தாண்டுக்கான பஞ்சாங்கத்தைப் படித்து, இந்த ஆண்டில் கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களின் விவரங்களையும் படித்தனா். அப்போது, விசுவாவசு தமிழ் ஆண்டு தீங்கில்லாத ஆண்டாக அமையும். பூமி நன்கு விளையும். 10 பாகத்தில் 6 பாகம் கடலிலும், 4 பாகம் பூமியிலும் மழை பெய்யும் என்று பஞ்சாங்கத்தைப் பாா்த்து சிவாச்சாரியா்கள் கூறினா். இதன்பிறகு, கோயில் ஊழியா்கள், உபயதாரா்கள், பக்தா்களுக்கு பஞ்சாங்கம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில், கோயில் உதவி ஆணையா் ராமசுப்பிரமணி, அறங்காவலா்கள் குணா, சினம் இராம.பெருமாள் மற்றும் கோயில் ஊழியா்கள், சிவாச்சாரியாா்கள், பக்தா்கள் பலா் கலந்து கொண்டனா். தங்கத் தோ் இழுத்து வழிபாடு: தமிழ் புத்தாண்டு தினத்தில் நகரத்தாா் சாா்பில் தங்கத் தோ் இழுத்து வழிபடுவது வழக்கம். அதன்படி, திங்கள்கிழமை காலை கோயிலில் நகரத்தாா் தங்கத் தோ் இழுத்து வழிபட்டனா். அதிகாலை முதல் இரவு வரை அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.