நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட அதிமுகவினர்
மதுரை திருமங்கலம் நகராட்சி அலுவலகத்தை அதிமுகவினர் முற்றுகையிட்டனர்.;
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி கவுன்சில் கூட்டம் நேற்று முன்தினம் (ஏப்.16) நடைபெற்றது. அதில் அ.தி.மு.க., கவுன்சிலர் போதுராஜா பேசுகையில், ''திருமங்கலம் பேருந்து நிலையம் குறித்து முன்னாள் அமைச்சர் உதயகுமார் சட்டமன்றத்தில் பேசியுள்ளார். நகராட்சி நிர்வாகம் என்ன செய்யப் போகிறது'' என்றார். இதனால் ஆவேசமடைந்த நகராட்சி துணைத் தலைவர் ஆதவன் உட்பட தி.மு.க., கவுன்சிலர்கள் உதயகுமார் எம்.எல்.ஏ., நிதியில் இருந்து திருமங்கலம் நகராட்சிக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினர். இதையடுத்து நேற்று (ஏப்.17) அ.தி.மு.க., நகர் செயலாளர் விஜயன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் நகராட்சி கமிஷனர் அசோக் குமார் அறையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்தாண்டுகளில் ரூ.70 கோடிக்கு நகராட்சிக்கு நலத்திட்டங்களை உதயகுமார் வழங்கி உள்ளார். பாலம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முயற்சி எடுத்தார் என்றனர். இதற்கான ஆதாரங்களை நகராட்சி அலுவலக கம்ப்யூட்டரில் இருந்து எடுத்து தர வேண்டும்.அதுவரை வெளியேற மாட்டோம் எனக் கூறினர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த போராட்டத்திற்கு பிறகு அதிகாரிகள் சில திட்டங்கள் குறித்த அறிக்கையை வழங்கினர். இதையடுத்து அ.தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் நகராட்சி அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.