மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் சந்திரநதி வாய்க்கால் குறுக்கே

பழுதடைந்து கைப்பிடி சுவர்கள் பெயர்ந்து விழுந்து அபாய நிலையில் உள்ள பாலம்;

Update: 2025-04-18 06:08 GMT
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளை பிரதான சாலையிலிருந்து, கீழ்குடி பகுதிக்கு செல்லும் கான்கிரீட் இணைப்பு பாலம் பழுதடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. திருக்குவளை - மேலப்பிடாகை பிரதான சாலையில் பிரிந்து, சந்திரநதி வாய்க்கால் குறுக்கே சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் கான்கிரீட் பாலம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. நாளடைவில் இந்த பாலம் மிகவும் பழுதடைந்து அதன் பக்கவாட்டு கைப்பிடிச் சுவர்கள் பெயர்ந்து விழுந்தும், ஆங்காங்கே கம்பி நீட்டிக் கொண்டும் உள்ளது. கீழ்குடி பகுதியில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்குள்ள ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விளைநிலத்திற்கு விவசாயிகள், இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். தென்புறம், கேகே நகர், கீழத்தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இந்த பாலம் வழியாக தான், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். பாலம் பழுதடைந்து இருப்பதால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை மிகுந்த அச்சத்துடன் தான் விளையாட அனுப்புகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் அபாயத்தை உணராமல் இடிந்து பழுதடைந்த கைப்பிடிச் சுவரில் அமர்ந்து கதை பேசுகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால், வாய்க்காலுக்குள் தவறி விழும் அபாயமும் உள்ளது. இது குறித்து, திருக்குவளை ஊராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, கீழ்குடியில் வசிக்கும் பொதுமக்கள், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News