பி.டி.ஒ., அலுவலக வளாகத்தில் சேதமடைந்த கான்கிரீட் சாலை
சேதமடைந்த கான்கிரீட் சாலையை சீரமைக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்;
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலகம், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம், வட்டார வள மையம், மாற்றுத்திறனாளி பயிற்சி பள்ளி ஆகியவை இயங்கி வருகின்றன.இங்கு, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பல்வேறு தேவைகளுக்காக தினமும் வந்து செல்கின்றனர். இந்த வளாகத்தில், சில ஆண்டுக்கு முன், கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது.தற்போது, கான்கிரீட் சாலை முறையான பராமரிப்பு இல்லாமல், சேதமடைந்து காணப்படுகிறது. இங்குள்ள, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் அருகே உள்ள கான்கிரீட் சாலை பெயர்ந்து உள்ளது. அப்பகுதியில் மாற்றுத்திறனாளி பயிற்சி பள்ளியில் படிக்கும் குழந்தைகள் அடிக்கடி விளையாடி வருகின்றனர். அப்போது, எதிர்பாராதவிதமாக மாற்றுத்திறனாளி குழந்தைகள், சேதமடைந்த சாலையில் சிக்கி விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சேதமடைந்த கான்கிரீட் சாலையை சீரமைக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.