போக்குவரத்து நெரிசல்

சுற்றுலாப் பயணிகள் கடும் அவதி;

Update: 2025-04-20 14:53 GMT
புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகை மற்றும் பள்ளி மாணவர்களுக்கு தொடர் விடுமுறையையொட்டு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி சோதனைச் சாவடி வழியாக நீலகிரிக்கு வருகை புரிந்த சுற்றுலா பயணிகள், மசினகுடி சோதனை சாவடியில் இபாஸ் பதிவு செய்ய தொலைத் தொடர்பு வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகள் இல்லாததால் அடர்ந்த வனப்பகுதியின் நடுவே கை குழந்தைகளுடன் சுற்றுலா பயணிகள் கடும் அவதி, இ பாஸ் பதிவு செய்ய தொலைதொடர்பு நெட்வொர்க் வசதி இல்லாததால் நீண்ட நேரமாக காத்திருந்த சுற்றுலா பயணிகள் சிலர் இ பாஸ் பதிவு செய்யாமலேயே உதகையை நோக்கி சென்றனர்........... நீலகிரி மாவட்டத்தின் இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை பிற மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வார நாட்களில் 6000 வாகனங்களும் வார இறுதியில் 8000 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டுமென இ பாஸ் முறையில் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை சற்று குறைந்து காணப்பட்ட நிலையில் புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகை மற்றும் பள்ளி மாணவர்களுக்கு தொடர் விடுமுறையை ஒட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. அதேபோல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மசினகுடி சோதனைச் சாவடி வழியாக ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் சொந்த மற்றும் வாடகை வாகனங்கள் மூலம் வருகை புரிந்தனர். ஆனால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இ பாஸ் பதிவு செய்யாமல் வருகை புரிந்த நிலையில் மசினகுடி சோதனை சாவடியில் தொலைத்தொடர்பு நெட்வர்க் வசதி இல்லாததால் இபாஸ் பதிவு செய்வதில் கடும் சிரமம் ஏற்பட்டது. தொலைத்தொடர்பு வசதி இல்லாமலும், இருக்கைகள், குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகள் இன்றி கை குழந்தைகளுடன் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இதனால் முதுமலை புலிகள் காப்பகத்தில் அடர்ந்த வனப்பகுதியின் நடுவே அமைந்துள்ள மசினகுடி சோதனை சாவடியில் கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்ற நிலையில் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இ பாஸ் பதிவு செய்யாமலேயே உதகையை நோக்கி சென்றனர். இதேபோல் நீலகிரி மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் அடர்ந்த வனப்பகுதியின் நடுவே அமைந்துள்ள மற்ற சோதனை சாவடிகளிலும் இ பாஸ் பதிவு செய்வதில் சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகுவதால் சோதனை சாவடிகளில் இ-பாஸ் பதிவு செய்ய தொலைதொடர்பு வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Similar News