சேலம் மாவட்டம் ஓமலூர், அயோத்தியாப்பட்டணம், குப்பனூர், ஏற்காடு, பனமரத்துப்பட்டி, வாழப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சேலத்திற்கு மாம்பழங்கள் விற்பனைக்கு வருகின்றன. கடந்த ஆண்டை விட இந்தாண்டு மாங்காய் விளைச்சல் அதிகமானதால் மாம்பழங்கள் வரத்து அதிகம் உள்ளது. இதனால் சேலத்தில் மாம்பழ சீசன் களைகட்டி உள்ளது. சேலம் கடைவீதி, அஸ்தம்பட்டி, 4 ரோடு, அம்மாபேட்டை, ஜான்சன்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிதிகளில் சாலையோரம் சிறு வியாபாரிகள் விற்பனைக்காக மாம்பழங்களை குவித்து வைத்து உள்ளனர். அதேபோன்று புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்கள், மார்க்கெட் உள்ளிட்ட இடங்களிலும் மாம்பழங்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டு உள்ளன. சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் சாலையோரம் உள்ள மாம்பழம் வியாபாரி ரஞ்சித் கூறுகையில், இன்று (அதாவது நேற்று) ஒரு கிலோ செந்தூரா மாம்பழம் ரூ.100-க்கு விற்கப்படுகிறது. அதேபோன்று சேலம் பெங்களூரா-ரூ.200, இமாம்-ரூ.180, சேலம் குண்டு மாம்பழம்-ரூ.120, பங்கனப்பள்ளி-ரூ.100-க்கு விற்பனை செய்கிறோம். வரத்து அதிகம் இருக்கும் போது விலை குறைய வாய்ப்பு உள்ளது என்றார். சேலம் மாவட்ட மாங்காய் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயபாலிடம் கேட்ட போது, கடந்த ஆண்டை விட இந்தாண்டு மாம்பழம் விளைச்சல் அதிகம் உள்ளது. இதனால் விற்பனைக்கு அதிக மாம்பழம் வரத்தொடங்கி உள்ளது. கடந்த வாரம் ஒரு நாளைக்கு 20 டன் மாம்பழங்கள் வரத்து இருந்தது. தற்போது 60 டன்னாக அதிகரித்து உள்ளது. இன்னும் சில நாட்களில் ஒரு நாளைக்கு 200 டன் மாம்பழங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறோம். வரத்து அதிகம் ஏற்படும் போது விலை குறைவாக விற்கப்படும் என்றார்.