சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கடித்த பாம்புடன் வந்த தொழிலாளி

பாம்பை பார்த்து அலறிய மக்கள்;

Update: 2025-04-22 04:34 GMT
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பெரிய காடையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (வயது 45). தறித்தொழிலாளியான இவர் பாம்பு பிடிக்கும் தொழிலும் செய்து வந்தார். நேற்று ஓமலூர் பகுதியில் உள்ள மரக்கடைக்குள் பாம்பு புகுந்த விட்டதாகவும், அதை பிடிப்பதற்கு வருமாறும் சிவப்பிரகாசுத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு அவர் விரைந்து சென்றார். பின்னர் அவர் அங்கிருந்த 3½ அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவருடைய கையை பாம்பு திடீரென கடித்தது. இருந்தாலும் சிவப்பிரகாசம் அந்த பாம்பை பிடித்து பிளாஸ்டிக் கவரில் போட்டார். அந்த பாம்புடன் சிகிச்சைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். பாம்புடன் வந்ததை பார்த்ததும் அங்கிருந்த ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் அவருக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு டாக்டர்கள் கூறினர். இதற்காக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. பாம்பை விட்டுவிட்டு வந்ததால் தான் ஆம்புலன்சில் ஏற்றுவோம் என்று அவரிடம் ஊழியர்கள் தெரிவித்தனர். இதற்கு அவர், பாம்புடன்தான் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வேன் என்று அடம்பிடித்துள்ளார்.. வேறு வழியின்றி பாம்புடன் அவரை ஆம்புலன்சில் ஏற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். இங்கேயும் பாம்புடன் வந்ததால் ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் சிகிச்சை பெற வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அங்கிருந்தவர்கள் அந்த பாம்பை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து சிவப்பிரகாசத்திற்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News