சேலம் கோட்ட அலுவலகத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு கைப்பந்து போட்டி
கோட்ட மேலாளர் தொடங்கி வைத்தார்;
சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக வளாகத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கான உள் கோட்ட அளவிலான கைப்பந்து போட்டி நேற்று காலை தொடங்கியது. போட்டி ெதாடக்க விழாவிற்கு ரெயில்வே கோட்ட பாதுகாப்பு படை கமிஷனர் சருவ்குமார் முன்னிலை வகித்தார். இதில், சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் சேலம், சென்னை, திருச்சி, பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் மண்டல அணிகள் பங்கேற்றன. தொடக்க விழாவில் ரெயில்வே பாதுகாப்பு படை துணை பாதுகாப்பு ஆணையர் செங்கப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர். நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் சேலம் கோட்ட அணி பாலக்காடு கோட்ட அணியை வீழ்த்தியது. 2-வது நடந்த போட்டியில், சென்னை கோட்ட அணி, திருவனந்தபுரம் கோட்ட அணியை வென்றது. தொடர்ந்து மாலையில் நடைபெற்ற போட்டிகளில் சேலம் கோட்ட அணி திருவனந்தபுரம் அணியையும், திருச்சி கோட்ட அணி பாலக்காடு அணியையும் வென்றன. இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) போட்டி நடைபெறும். நாளை மாலையில் இறுதி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெறும்.