சேலம் விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் உலக பூமி தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கல்லூரியின் சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பில் சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவின் சுவரில் வனவிலங்குகளை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு எளிமையாக உணர்த்தும் வகையில் கல்லூரி மாணவர்களால் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டன. இந்த சுவர் ஓவியம் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். இதில் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவின் உதவி இயக்குனர் செல்வகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுவர் ஓவியங்களை திறந்து வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் சுற்றுச்சூழல் அமைப்பின் ஆலோசகர் ஸ்ரீவித்யா செய்திருந்தார்.