சேலத்தில் வருகிற ஜூன் மாதம் பா.ஜனதா மாநில மாநாடு
மாநில துணைத்தலைவர் பேட்டி;
பா.ஜனதா மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் தடையை மீறி மாலை அணிவித்தோம். இதையொட்டி 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14-ந்தேதி நான் (கே.பி.ராமலிங்கம்) உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் அனைவரும் தற்போது விடுதலை பெற்று உள்ளோம். சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். ஆனால் அஞ்சலி செலுத்த சென்ற ஒவ்வொரு இடங்களிலும் தி.மு.க.வினர் இடையூறு செய்தனர். இனியாவது தி.மு.க. அரசு மாறிக்கொள்ள வேண்டும். தேசம் காப்போம், தமிழகம் வெல்வோம் என்ற தலைப்பில் பா.ஜனதா சார்பில் மாநில மாநாடு வருகிற ஜூன் மாதம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.