மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற காலநிலை மாற்றம் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் தலைமையில் காலநிலை மாற்றம் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.;

Update: 2025-04-23 12:13 GMT
நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில், வன பாதுகாவலர் சி.கலாநிதி, முன்னிலையில், வேளாண்மைத்துறை மற்றும் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் சார்பில், காலநிலை மாற்றம் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. வேளாண்மைத்துறை மற்றும் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் சார்பில் இன்றைய தினம் காலநிலை மாற்றம் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்று வருகிறது. தற்போது நிலவி வரும் காலநிலை மாற்றம் காரணமாக இயற்கைக்கு மாற்றாக எப்பொழுதும் இல்லாத வகையில் அதிகளவில் வெப்பம், அதிகளவில் மழை பொழிவு, வறட்சி, மேக வெடிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக விவசாயத்தில் பயிர்களில் நோய்த்தொற்று ஏற்பட்டு விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும், மண் வளம் பாதித்து மண்ணின் தன்மை குறைந்து பயிர்களின் உற்பத்தி பாதிக்கிறது. இதனால் விலைவாசியில் மாற்றம் ஏற்படுகிறது. எனவே, விவசாயிகள் மழைப்பொழிவிற்கு ஏற்றவாறு காலநிலையை பொருத்து தரமான விதைகள் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பயிரிட வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் பசுமை பரப்பை 33 சதவிகிதம் அதிகரிக்கும் வகையில் தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது 15 சதவிகிதம் மட்டுமே பசுமை பரப்பு உள்ளது. எனவே, அதிகளவில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும். பசுமை பரப்பை அதிகரித்தால் மட்டுமே காலநிலை சீராக அமையும். பொருளாதார ரீதியாக பணம், காசு இருப்பினும் உணவின்றி உயிர் வாழ முடியாது. உணவின்றி உயிர் இல்லை என்பதை அனைவரும் உணர வேண்டும். விவசாயம் மூலம் உணவுப்பொருட்களை உற்பத்தி செய்தால் மட்டுமே உயிர் வாழ முடியும் என்பதை உணர்ந்து மரக்கன்றுகளை நட்டு புவி வெப்பமாதலை தடுத்திட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பூமியை வெப்பம் அடைவதில் இருந்து பாதுகாக்கும் வகையில் அதிக அளவில் மரக்கன்றுகள் நடுதல், கார்பன் டை ஆக்சைடு வெளியிடுவதை குறைதல், மழைநீரை சேமித்தல், நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரித்தல், பராம்பரிய விவசாய முறை உள்ளிட்ட செயல்களில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மேலும், காலநிலைக்கு ஏற்றவாறு விவசாய பெருமக்கள் வேளாண்மை பயிர் செய்து இலாபம் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் பெ.கலைச்செல்வி, வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) பொ.பேபிகலா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) இராமசந்திரன், கோயமுத்தூர் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய பேராசிரியர் மற்றம் தலைவர் முனைவர்.என்.கே.சத்தியமூர்த்தி, இணை பேராசிரியர் (உழவியல்) முனைவர் க.தீபாகரன், பேராசிரியர் (உழவியல்) முனைவர் எஸ்.அழகுதுரை, நாமக்கல் உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் செ.கோவிந்தசாமி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News