வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா,நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.6.00 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.;
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், உடையார்பாளையம், மங்களப்புரம் மற்றும் அயில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று மாவட்ட ஆட்சியர் ரூ.6.00 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், மங்களபுரம் ஊராட்சியில் பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக பிஎம்ஜன்மன் (PM JANMAN) திட்டத்தின் கீழ், தலா ரூ.5.07 இலட்சம் மதிப்பீட்டில் 12 வீடுகள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு, மொத்த பயனாளிகள் விபரம், வீடுகள் தற்போதைய கட்டுமான பணி நிலவரம், வீடுகளின் அமைப்பு, மொத்த அறைகள் எண்ணிக்கை, நீளம், அகலம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு பயனாளிகளுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து, மங்களபுரம் ஊராட்சி, உரம்பு கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் 3 பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட ஆணைகள் வழங்கப்பட்டு, கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.மேலும், மங்களபுரத்தில் பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3.25 கோடி மதிப்பீட்டில் இராசிபுரம் – ஆத்தூர் சாலை முதல் சிங்கிலியான்கோம்பை சாலை வழியாக தண்டகவுண்டன்பாளையம் – மூலக்காடு – வெம்பாகவுண்டம்புதூர் வரை தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு, சாலையின் தரம், நீளம், அகலம், சாலை அமைக்க பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம், சாலை அமைக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள ஒப்பந்த காலம், மொத்த பணியாளர்கள் விபரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், ரூ.1.83 கோடி மதிப்பீட்டில் ஊத்துப்புளிக்காடு வழியாக ஆண்டிக்குட்டை சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு, ஒப்பந்தகாலத்திற்குள் பணிகளை தரமாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார்.அதனைத்தொடர்ந்து, வெங்கடாசலபதி மகளிர் சுய உதவிக்குழுவினர் ரூ.10.00 இலட்சம் வங்கி கடன் இணைப்பு மற்றும் ரூ.1.05 இலட்சம் மதிப்பில் கடனுதவி பெற்று பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக மா கல் மூலம் சிறுவர்களுக்கான விளையாட்டு சமையல் உபகரணங்கள், வீட்டிற்கான பனியாரக்கல், இட்லி பாத்திரம், மாசால் அறைக்கும் கல், பாத்திரம், நீர்குவளை, அகல் விளக்கு உள்ளிட்ட சமையல் உபகரணங்கள் தயாரித்து வருவதை பார்வையிட்டு, இப்பொருட்கள் தயாரிக்க பயன்கடுத்தப்படும் மூலப்பொருட்கள் விபரம், பொருட்கள் தயாரிக்க ஆகும் காலம், அவற்றின் தரம், விலை விபரம், மொத்த விற்பனை விபரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, இப்பணியில் ஈடுபட்டுட்டுள்ள மொத்த பணியாளர்கள் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்தார். மேலும், இணைய வழியாக ஆன்லைன் மூலம் விற்பனை மேற்கொள்ளவது குறித்து மகளிர் சுய உதவிக்குழுவினருடன் கலந்துரையாடினார். நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், உடையார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் காலநிலை மாற்ற இயக்கம் சார்பில் பசுமைப்பள்ளி திட்டத்தின் கீழ் மழைநீர் சேகரிப்பு அமைப்பு, மூலிகை மற்றும் காய்கறித்தோட்டம் அமைக்கப்பட்டுள்ளதையும், சோலார் அமைக்கப்பட்டு சூரிய மின் சக்தி சேமிக்கப்படுவதையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுகளில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கு.செல்வராசு, நாமகிரிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பா.கஜேந்திரபூபதி, தி.சரவணன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்த கொண்டனர்.