மீன்சுருட்டி டு கல்லாத்தூர் சாலையை மாநில நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த கோரி ஐந்து கிராமங்களில் கருப்புக் கொடி ஏற்றம்
மீன்சுருட்டி டு கல்லாத்தூர் சாலையை மாநில நெடுஞ்சாலை தரம் உயர்த்தி சாலையை செப்பனிட வலியுறுத்தி ஐந்து கிராமங்களில் முக்கிய இடங்களில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது.;
அரியலூர், ஏப்.23- ஜெயங்கொண்டம் அருகே சாலை வசதி அமைத்து தராத தமிழக அரசை கண்டித்து 2-வது ஆண்டாக 5 கிராமங்களில் கருப்புக்கொடி ஏந்தி பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டி-கல்லாத்தூர் சாலையை தேசிய நெடுஞ்சாலையையாக அறிவித்து, சாலை வசதி அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் தமிழக அரசிடம் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் மீன்சுருட்டி- கல்லாத்தூர் சாலை மீட்பு மேம்பாட்டு குழுவினர் சார்பில், கடந்தாண்டு முதற்கட்டமாக சாலை வசதி கேட்டு கருப்புக்கொடி ஏந்தி நூதன போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து இருசக்கர வாகன பேரணி, உண்ணாவிரதப் போராட்டம், சாலை மறியல் என பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் தமிழக அரசு மாநில நெடுஞ்சாலையாக அறிவிக்காமல் சாலை வசதி அமைத்து தர நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் தொடர்ந்து போராட்டம் நடத்தியும் பொது மக்களின் கோரிக்கையை ஏற்காத தமிழக அரசை கண்டித்து மீன்சுருட்டி-கல்லாத்தூர் சாலை மீட்பு மேம்பாட்டு குழுவினர் சார்பில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி வெத்தியார்வெட்டு, சலுப்பை, சத்திரம், ஆலத்திபள்ளம், குண்டவெளி ஆகிய 5 கிராமங்களில் வீடுகளுக்கு முன்பு கருப்புக் கொடியை ஏற்றி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீன்சுருட்டி கல்லாத்தூர் சாலையை தேசிய நெடுஞ்சாலையாக அறிவித்து உடனடியாக தார் சாலை அமைதி தர வேண்டும் எனவும், இல்லாத பட்சத்தில் அடுத்த கட்டமாக மக்களை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாகவும் தமிழக அரசுக்கு அக்கிராம மக்கள் எச்சரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.