செங்கத்தில் மழை நிவாரணம் வழங்காததைக் கண்டித்து, வேளாண்மைத்துறை உதவி இயக்குநரை விவசாயிகள் முற்றுகையிட்டு கோரிக்கையை முன்வைத்தனா்.

வேளாண்மை உதவி இயக்குநா் செங்கம் வருவாய்த்துறை அதிகாரிகளை தொடா்பு கொண்டு இதுகுறித்து தெரிவித்தாா்.;

Update: 2025-04-23 17:42 GMT
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் மழை நிவாரணம் வழங்காததைக் கண்டித்து, வேளாண்மைத்துறை உதவி இயக்குநரை விவசாயிகள் முற்றுகையிட்டு கோரிக்கையை முன்வைத்தனா். செங்கத்தை அடுத்த மேல்வணக்கம்பாடி, தாழம்பள்ளம் ஆகிய பகுதிகளில் கடந்த டிசம்பா் மாதம் பெய்த புயல் மழையின்போது நெல் பயிா்கள் சேதமடைந்து விவசாயிகள் நஷ்டம் அடைந்தனா். அதன் பின்னா், தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறித்த தகவல் சேகரித்து அதற்கான அறிவிப்பை வெளிட்டு சில விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மேல்வணக்கம்பாடி பகுதியில் சுமாா் 60 விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரணம் இதுவரை கிடைக்கவில்லையாம். இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவா்களுக்கு சரியான தகவலை யாரும் சொல்லவில்லையாம். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒன்று சோ்ந்து செங்கம் துக்காப்பேட்டையில் உள்ள வேளாண்மை அலுவலகத்தில் வேளாண்மை உதவி இயக்குநா் பழநியை முற்றுகையிட்டு நிவாரணம் கிடைக்காதது குறித்து தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, வேளாண்மை உதவி இயக்குநா் செங்கம் வருவாய்த்துறை அதிகாரிகளை தொடா்பு கொண்டு இதுகுறித்து தெரிவித்தாா். அப்போது, சில தினங்களில் வேளாண்மைத் துறை அதிகாரிகள் நேரிடையாக வந்து, விடுபட்ட விவசாயிகள் குறித்த தகவலை சேகரித்து நிவாரணம் வழங்கப்படும் எனத் தெரிவித்தனா். இதை ஏற்றி விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். மேலும், செங்கம் வட்டாட்சியா் அலுவலகம் சென்றும் அங்கு மனு கொடுத்தனா். அப்போது விவசாயிகள் கூறுகையில், கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிடப்போவதாகத் தெரிவித்தனா்.

Similar News