சேலம் மத்திய சிறையில் கோவை சரக சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி திடீர் ஆய்வு மேற்கொண்டார். சேலம் மத்திய சிறையில் 1,300க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகளுக்கு சிறையில் சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. வாரத்துக்கு 2 நாட்கள் சிக்கன் குழம்பு வழங்கப்படுகிறது. அதை தாண்டி சிறையில் கேண்டீனும் இயங்கி வருகிறது. அதில் கைதிகள் விரும்பும் உணவுகளை பணம் கொடுத்து வாங்கி சாப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கேண்டீன் மூலம் பல்வேறு மோசடிகள் நடந்து வருவதாக சிறைத்துறை உயரதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, இது குறித்து விசாரணை நடத்த கோவை சரக சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி வெள்ளிக்கிழமை மாலை முதல் இரவு வரை சிறையில் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, அலுவலர்களிடம் கேண்டீன் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். விசாரணையின் முடிவில் உண்மை தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.