செம்பியன்மகாதேவி ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி கோயில் கும்பாபிஷேகம்
சிவவாத்திய குழுவினரின் சிவ நடனத்தை கண்டு பக்தர்கள் பரவசம்;
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த செம்பியன்மகாதேவி கிராமத்தில் அமைந்துள்ள, ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. கடந்த 15 -ம் தேதி அனுக்ஞை விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. பின்னர், முதல் யாக சாலை பூஜையும், கும்பாபிஷேக நாளான நேற்று இரண்டாம் கால யாக சாலை பூஜை மற்றும் மகா பூர்ணாஹூதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, மேளதாளங்கள் மற்றும் சிவ வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் கடத்தை சுமந்தபடி கோயிலை சுற்றி வந்தனர். பின்னர், கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. தொடர்ந்து, மூலவர், விநாயகர், ஸ்ரீ வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், சுவாமிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா திபாராதனை காண்பிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வரவழைக்கப்பட்டிருந்த ஆடுங் குதிரை, சிவவாத்தியத்திற்கு ஏற்ப நடனமாடியதை பக்தர்கள் கண்டு ரசித்ததோடு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும், சிவவாத்திய குழுவினரின் சிவ நடனத்தையும் பக்தர்கள் கண்டு பக்தி பரவசமடைந்தனர்.