சிபிசிஎல் நிறுவனம் கூலித் தொழிலாளர்களுக்கு வழங்குவதாக ஒப்புக்கொண்ட நிவாரணத் தொகை பெற்று தந்து

10 ஆயிரம் குடும்பங்களை பாதுகாக்க பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு கோரிக்கை;

Update: 2025-05-16 10:39 GMT
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜமுனா செந்தில்குமார், தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இடம் கொடுத்துள்ள ஒரு மனுவில் கூறியிருப்பதாவது நாகை மாவட்டம் திருமுருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சியில் இயங்கி வந்த மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் நிறுவனம் வசம் உள்ள 650 ஏக்கர் நிலம் மற்றும் 618 ஏக்கர் விவசாய நிலத்தையும் பனங்குடி ஊராட்சியின் வளர்ச்சிக்காகவும், நாகை மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாகவும் பயன்படுத்துவோம் என வாக்குறுதி அளித்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில், பனங்குடி ஊராட்சியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும், விவசாய கூலி தொழிலாளர்களுக்கும் மறுவாழ்வு மற்றும் நிவாரணம் வழங்க கோட்டாட்சியர் எடுத்த கணக்கெடுப்பு பட்டியல் நாளிதழ்களில் வெளியிடப்பட்டு, ரூ.5 லட்சம் வழங்குவதாக உறுதியளித்தனர். ஆனால், இதுவரை நிவாரணத் தொகை கூலித் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை. தற்போது, சிபிசிஎல் நிறுவனம் விரிவாக்க பணிகளை நிறுத்தி உள்ளது. பனங்குடி ஊராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 5 ஊராட்சிகளை சேர்ந்த 10 ஆயிரம் குடும்பங்கள் விவசாய நிலங்களை இழந்து, விவசாயம் செய்ய முடியாமலும், நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகளை இழந்து வாழ்வாதாரத்தை பறிகொடுத்துள்ளனர். வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க அவர்கள் வாங்கிய கடனை கட்ட முடியாமல், வறுமை சூழலில் வாழ்ந்து வருகின்றனர். தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழக மக்களை வஞ்சிக்கவே மத்திய அரசு சிபிசிஎல் நிறுவனத்தின் விரிவாக்க பணிகளை தடுத்து நிறுத்தி உள்ளது என பொதுமக்கள் கருதுகின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட ஆட்சியர், சிபிசிஎல் நிறுவன உயர் அதிகாரிகள் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறுவாழ்வு மற்றும் நிவாரணத் தொகையை வழங்கி, 10 ஆயிரம் குடும்பங்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

Similar News