துர்நாற்றம் வீசும் தாமரை குளத்தின் தண்ணீர் - செத்து மிதக்கும் மீன்கள்
துர்நாற்றம் தாங்காமல் மூக்கை பொத்திக் கொண்டு நடைபயிற்சி செய்யும் பொதுமக்கள்;
நாகை மாவட்ட வளர்ச்சி குழும தலைவரும், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் நல சங்க தலைவருமான என்.பி.பாஸ்கரன், மாவட்ட ஆட்சியர், நாகை நகராட்சி ஆணையர் மற்றும் தலைவர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள ஒரு கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது நாகை வெளிப்பாளையம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் தாமரைக் குளம் அமைந்துள்ளது. குளத்தை தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையைடுத்து, நாகை நகராட்சி நிர்வாகம், கடந்த 2021 -ம் ஆண்டு மூலதன மானிய நிதியிலிருந்து, ரூ.1.25 கோடி மதிப்பில், நாகை நகராட்சி நிர்வாகம், தாமரை குளத்தை தூர்வாரி, பொதுமக்கள் நடைப்பயிற்சி செய்யும் வகையிலும், குழந்தைகள் விளையாடி மகிழும் வகையிலும் சீரமைத்துள்ளது. இதை, அப்போதைய மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயர் திறந்து வைத்தார். இதனால், பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி செய்து வருகின்றனர். மேலும், குழந்தைகள் விளையாடி மகிழ்ந்து வருகின்றனர். போதிய பராமரிப்பு இல்லாததால், தாமரை குளத்தில் தண்ணீர் துர்நாற்றம் அடிக்கிறது. மீன்கள் செத்து மிதக்கின்றன. நடைப்பயிற்சி செய்யும் பொதுமக்கள், துர்நாற்றத்தால் மூக்கை பொத்திக்கொண்டு தான் நடை பயிற்சி செய்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் துர்நாற்றத்தால் உடல்நிலை பாதிக்கும் அபாயம் உள்ளது. தாமரைக் குளத்திற்கு அருகில் வசிப்பவர்கள், நாள்தோறும் தாமரை குளத்தில் குளித்தும், தங்கள் உடைகளை துவைத்தும், தாமரைக் குளத்தின் அருகில் காய போட்டு வருகின்றனர். மேலும், தாங்கள் வளர்த்து வரும் ஆடுகளை தாமரைக் குளத்தின் வளாகத்தில் மேய விடுகின்றனர். மேலும், கடந்த வாரம் குளத்தில் குளித்த ஒரு சிறுவன் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டான். அவன் உடல் இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் எடுக்கப்பட்டது. இறந்தவன் உடல் மிதந்த தண்ணீர் அகற்றப்படவில்லை. மேலும், தாமரை குளத்தின் வளாகம் முழுவதும் ஆங்காங்கே செடி, கொடிகள் முளைத்துள்ளன. எனவே, நகராட்சி நிர்வாகம், பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் நலன் கருதி உடனடியாக தாமரை குளத்தில் உள்ள தண்ணீரை அகற்றி விட்டு, புதியதாக தண்ணீர் விட வேண்டும். இரவு நேரங்களில் நடைப்பயிற்சி செய்யும் பொது மக்களின் நலன் கருதி, குளத்தின் நான்கு புறங்களிலும் மின்விளக்கு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.