நீண்ட தூர விரைவு ரயில்களை பராமரிக்க வேளாங்கண்ணியில் பிட் லைன் அமைக்க வேண்டும்
இந்தியன் ரயில்வே கட்டுமான இன்டர்நேஷனல் துறை இயக்குனரிடம் கோரிக்கை;
நாகை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவரும், தேசிய பொது குழு உறுப்பினருமான தங்க.வரதராஜன், இந்தியன் ரயில்வே கட்டுமான இன்டர்நேஷனல் துறையின் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரை, நாகூர்- நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்போர் நல சங்க தலைவர் எஸ்.மோகன், செயலாளர் சித்திக், பொருளாளர் பாலா, உறுப்பினர்கள் நாகூர் ஆண்டவர் தர்கா ஆதீனம் தஸ்லீம், ராமசாமி, முருகேசன் ஆகியோர் நேரில் சந்தித்து, அவரது பணி சிறக்க பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், தங்க.வரதராஜனிடம் அவர்கள் கொடுத்துள்ள ஒரு கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது நாகை -நாகூர்- வேளாங்கண்ணி- காரைக்கால் மற்றும் திருநள்ளார் பகுதிக்கு தேவையான நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும். அவற்றில் முக்கியமாக, ஈரோடு - திருச்சி ரயில் (56809 / 56810) அல்லது திருச்சி - பாலக்காடு - திருச்சி விரைவு ரயில் (16843 / 16844) அல்லது திருச்சி - திருவாருர் - திருச்சி (56806/56805) ரயிலை உடனடியாக காரைக்கால் வரை நீட்டித்து தர வேண்டும். மதுரை - புனலூர் - மதுரை விரைவு ரயிலை (16729/16730) காரைக்கால் வரை நீட்டித்து தர வேண்டும். தினசரி இரவு நேர விரைவு ரயில் காரைக்கால் - பெங்களூர் இடையே, நாகை -தஞ்சை -திருச்சி நாமக்கல் வழியாக இயக்க வேண்டும். பாண்டிச்சேரி - வேளாங்கண்ணி இடையே விரைவு ரயிலை தினசரி இயக்க வேண்டும். நீண்ட தூர விரைவு ரயில்களை பராமரிக்க, வேளாங்கண்ணியில் பிட் லைன் (PIT LINE) அமைக்க வேண்டும். வருமான அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து, காரைக்கால் - தஞ்சை ரயில் பாதையை இரட்டை ரயில் பாதையாக மாற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட தங்க.வரதராஜன் கோரிக்கைகளை நிச்சயமாக நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார். நிகழ்ச்சியில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.நேதாஜி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.