நாகூரில் திறந்து கிடந்த கழிவறை தொட்டியில் விழுந்த பசு மாடு

தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரம் போராடி மீட்டனர்;

Update: 2025-05-19 08:35 GMT
நாகை மாவட்டம் நாகூர் புதிய பஸ் நிலையத்தில், பயணிகள் மற்றும் நாகூர் ஆண்டவர் தற்காவிற்கு வருகை தரும் பக்தர்களின் பயன்பாட்டுக்காக நகராட்சி பொது கழிப்பிடம் உள்ளது. இதற்கான, கழிவுநீர் தொட்டி திறந்து கிடப்பதால் அவ்வப்போது கால்நடைகளும், மனிதர்களும் விழுந்து விபத்து ஏற்படுவதாக இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நாகை நகராட்சிக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், இதுவரை கழிவறை தொட்டியை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், நேற்று திறந்து கிடந்த கழிவறை தொட்டியில், ஒரு பசு மாடு விழுந்து வெளியேற முடியாமல் தவித்தது. இதுகுறித்து, பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் 2 வாகனங்களில் வந்தனர். பேரிடர் காலங்களில் மீட்பு பணிக்காக பயன்படுத்தப்படும் பிரத்தியேகமான கருவிகள் மூலம் சிமெண்ட் கான்கிரீட்டுகளை வெட்டி எடுத்து, பசு மாட்டினை கயிறு கட்டி உயிருடன் மீட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி பசு மாட்டை மீட்ட தீயணைப்புத் துறையினரை அப்பகுதி மக்கள் பாராட்டினர். நகராட்சி நிர்வாகம் பொறுப்புணர்ந்து, ஆபத்தை விளைவிக்கும் இடங்களை கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுத்து உயிர் பலி நேராமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News