திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் கோவில் அமுது படையல் விழா

பக்தர்களுக்கு வேளாக்குறிச்சி ஆதீனம் அருளாசி;

Update: 2025-05-19 08:50 GMT
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடியில் உத்தராபதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புமிக்க இக்கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை பரணி பெருவிழாவான அமுது படையல் விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம் . நடப்பாண்டிற்கான திருவிழாவில், 15 நாட்கள் நடைபெறும் செண்பகப்பூ திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை 10 மணியளவில், உத்தராபதீஸ்வரர் சாமிக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் சாமி வெள்ளை சாத்தி புறப்பாடும் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு சாயரட்சை தீபாராதனையும், சர்க்கரை பொங்கல் பாவாடை நிவேதனமும் நடைபெற்றது. நள்ளிரவில் வடக்கு வீதியில் ஐயடிகள் காடவர்கோன் மகாராஜாவுக்கு, சாமி செண்பகப்பூ வாசனையுடன் காட்சி கொடுத்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில், பக்தர்களுக்கு வேளாக்குறிச்சி ஆதீனம் 18-வது குருமகா சன்னிதானம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசி வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை, ஆதீன இளவரசு அஜபாநடேஸ்வர சுவாமிகள், கோவில் பொருளாளர் சுதாகர் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். விழாவில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News