மாணவர் சிறப்பு குறைதீர் முகாம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதலுக்காக ‘மாணவர் சிறப்பு குறைதீர் முகாம்’ நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தகவல்;
தமிழ்நாடு அரசு மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. பள்ளிக் கல்வியை முடித்த மாணவ, மாணவிகள் உயர்கல்விப் படிப்பை உறுதி செய்வதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளிப் படிப்பை முடித்த மாணவ, மாணவிகள் உயர்கல்வியில் மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கான வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மாவட்டம் கிராமப்புறங்கள் நிறைந்த மாவட்டம் ஆகும். ஏராளமான மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளிக் கல்வியை கிராமப்புற பள்ளிகளில் படித்து வருகின்றனர். இம்மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டும் நோக்கில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், ‘உயர்வுக்குப்படி – உயர்கல்வி வழிகாட்டி குழு’ அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ‘கட்டுப்பாட்டு அறை’யில் தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, ‘கல்லூரிக் கனவு’ மற்றும் ‘உயர்வுக்குப்படி’ போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரையும் உயர்கல்வியில் சேர்க்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 12-ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதலுக்காக ‘மாணவர் சிறப்பு குறைதீர் முகாம்’ திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 28.05.2025 (புதன்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 01.30 மணி வரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு குறைதீர் முகாமில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத மாற்றுத்திறனாளிகள், பட்டியல், பழங்குடியின வகுப்பினர், ஆதிதிராவிடர், பழங்குடியின விடுதி மற்றும் கள்ளர் சீரமைப்புத் துறை விடுதிகளில் பயின்ற மாணவ, மாணவிகள், உயர்கல்வியைத் தொடருவதற்கான உதவி தேவைப்படும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் தங்கள் மாணவ, மாணவிகள் உயர்கல்வி வழிகாட்டுதலுக்கான இச்சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுவதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது, என மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.