முழங்காலிட்டு மெழுகுவர்த்தி ஏந்தி நேர்த்தி கடன்

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே மறவபட்டி புதூர் புனித சலேத் மாதா தேவாலய 140-ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு முழங்காலிட்டு மெழுகுவர்த்தி ஏந்தி நேர்த்தி கடன் செலுத்திய இறைமக்கள்;

Update: 2025-05-24 05:01 GMT
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே மறவபட்டி புதூர் புனித சலேத் மாதா திருத்தலத்தின் 140-ம் ஆண்டு திருவிழா நடைபெற்றது . நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் முழங்காலிட்டு மெழுகுவர்த்தி ஏந்தி புனித சலேத் மாதா சப்பரத்தை சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திருத்தலத்தின் 140 - ம் ஆண்டு திருவிழா கடந்த 13-ஆம் தேதி மாலை நவநாள் நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. நவநாள் நடைபெற்ற நாட்களில் ஒவ்வொரு நாள் மாலையும் புனித சலேத் மாதாவின் திரு உருவம் தாங்கிய கொடி, மற்றும் புனித சலேத் மாதா மின் ரதம் போன்றவை ஜெபமாலை ஊர்வலத்துடன் நடைபெற்று நவநாள் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. புனித சலேத் மாதா திருவிழா கொடியேற்று விழா கடந்த 21-ந் தேதி புதன்கிழமை நடைபெற்றது. இதில் புனித சலேத் மாதா திருவுருவம் தாங்கிய கொடியுடன் ஜெபமாலை ஊர்வலம் நடத்தப்பட்டு ஆடம்பர கொடியேற்றம் நடத்தப்பட்டது. தொடர்ந்து 22- ஆம் தேதி வியாழக்கிழமை இரவு சப்பர பவனி நடைபெற்றது. இதன் பின்னர் புனித சலேத் மாதா உள்ளிட்ட புனிதர்களின் சொரூபங்கள் வைக்கப்பட்ட மின் ரத சப்பர பவனி மற்றும் வாண வேடிக்கை நடைபெற்றது. நிறைவு நாளான இன்று 23-ஆம் தேதி வெள்ளிக்கிழமை புனித சலேத் மாதா உள்ளிட்ட புனிதர்களின் சொரூபங்கள் ஏற்றப்பட்ட பகல் சப்பார தேர் பவனி நடைபெற்றது. தேர்பவனியின் இறுதியில் புனித சலேத் மாதா சொரூபம் தாங்கிய சப்பரம் புனித சலேத் மாதா திருத்தலம் முன்பாக நிலை நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மறவபட்டி புதூர் மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் என ஏராளமான இறைமக்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி முழங்காலிட்டு சப்பாரத்தை சுற்றி வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். பின்னர் இறுதியாக புனித சலேத் மாதா உள்ளிட்ட புனிதர்களின் சொருபங்கள் தேவாலயத்திற்குள் கொண்டு சென்று கூட்டு நன்றி திருப்பலி நடைபெற்றது. திருவிழா ஏற்பாடுகளை ஊர் பெரியதனக்காரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Similar News