சனி பிரதோஷம்: நாமக்கல் சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
பிரதோஷம் எந்த நாளில் வந்தாலும் சிறப்புதான் என்றாலும் சனிக்கிழமை வருவது பெரும் சிறப்பு. சனி பிரதோஷம் கோடி கோடி புண்ணியம் தரும். பிரதோஷ நாளில் சிவாலயத்தை வலம் வந்து வணங்குவது மிக முக்கியமான வழிபாடாக கருதப்படுகிறது.;
ஒவ்வொரு மாதமும் வரும் பிரதோஷ நாட்களில் பக்தர்கள் சிவன் கோவில்களுக்கு சென்று நந்தியம்பெருமான் மற்றும் சிவதரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில், நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் சனி பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி நாமக்கல் தட்டார தெருவில் அமைந்துள்ள ஏகாம்பர ஈஸ்வரர் காமாட்சி அம்மன் கோவில் சிவன் மற்றும் லிங்கத்திற்கு பால், இளநீர் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமி சிறப்பு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மேலும் சாமி பின்புறம் சுழல் லிங்கம் அமைத்து அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.இதேபோல் சேந்தமங்கலம் சவுந்தரவள்ளி அம்பாள் சமேத சோமேஸ்வரர் சிவன் கோவில்,சர்கார் பழையபாளையம் ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் கோவில், வள்ளிபுரம் ஈஸ்வரன் கோவில்,முத்துக்காப்பட்டி ஸ்ரீ விசாலாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில், சித்தர் மலை சிவன் கோவில்,புதுப்பட்டி ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ குபேர லிங்கேஸ்வரர் ஆலயத்தில் மூலவர் குபேர லிங்கேஸ்வரர், புத்தூர் ஈஸ்வரன் கோவில்களில் சனி பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.