பட்டாசு வெடி அதிர்வால் கட்டிடம் இடிந்து விழுந்து ஒருவர் காயம்.
மதுரை செக்கானூரணியில் பட்டாசு வெடித்து அதிர்வால் கட்டடத்தின் முன்பகுதி கீழே விழுந்து ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.;
மதுரை மாவட்டம் செக்கானூரணி தேவர் சிலை அருகே குடியிருந்து வருபவர் சின்னத்திரை நடிகை சந்திரசேகரி. இவர்களின் வீட்டின் மேல் மாடியில் மராமத்து பணிகள் இன்று (மே.25) நடைபெற்றதாக தெரிகிறது. மேலும் இன்று முகூர்த்த நாளாக இருந்ததால் செக்கானூரணியில் பல்வேறு பகுதியில் அதிக அளவு வெடிகள் விடப்பட்டதாகவும் அப்போது மராமத்து பணி நடைபெற்றுக் கொண்டிருந்த வீட்டின் அருகில் பட்டாசு வெடித்த போது அதிர்வு ஏற்பட்டு முதல் தளத்தின் கட்டிட முன்பகுதி இடிந்து கீழே விழுந்ததில் கீழே இருந்த காய்கறி கடையில் காய்கறி வாங்க வந்த சதீஷ் என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். செக்கானூரணி உசிலம்பட்டி போன்ற பகுதிகளில் நடைபெறும் விழாக்களுக்கு அதிக வெடிச்சத்ததுடன் பட்டாசுகள் வெடிப்பதால் இதுபோன்ற விபத்துக்கள் நடப்பதாக பொதுமக்கள் தொடர் புகார் தெரிவிக்கின்றனர். ஆகையால் பட்டாசு வெடிப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் அதிக சத்தத்துடன் கூடிய பட்டாசுகளை வெடிப்பதற்கு போலீசார் அனுமதி வழங்கக் கூடாது என பொதுமக்கள் கூறுகின்றனர் பட்டாசு வெடித்து அதிர்வு ஏற்பட்டதில் கட்டிடம் இடிந்து விழுந்து ஒருவர் படுகாயம் அடைந்தது குறித்து செக்கானூரணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.