ஏற்காட்டில் கோடை விழாவையொட்டி சுற்றுலா பயணிகளுக்கு நேற்று படகு போட்டி நடந்தது
தம்பதிகளுக்கான படகு போட்டியில் கரூர் தம்பதி முதலிடம் பிடித்தனர்;
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் தற்போது கோடை விழாமலர்க்கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த விழாவையொட்டி நேற்று சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் படகு போட்டி நடத்தப்பட்டது. சுற்றுலா துறை சார்பில் நேற்று படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக நடைபெற்ற இந்த போட்டியில் ஆண்கள் பிரிவு, பெண்கள் பிரிவு, தம்பதியர் பிரிவு மற்றும் படகு இல்ல ஊழியருக்கான துடுப்பு படகு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் படகு இல்லத்தில் இருந்து ஏரி பூங்கா கரை வரை சுமார் 250 மீட்டர் தூரம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இப்போட்டியில் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். படகு போட்டியின் நடுவே பனி மூட்டம் சூழ்ந்தாலும், போட்டியாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஒருசிலர் பனிமூட்டத்தில் இலக்கு கோடு தெரியாமல் வேறு, வேறு திசைக்கு சென்றனர். ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் விருதாச்சலத்தை சேர்ந்த சரத் ராஜ், ராஜ் பரத் முதல் பரிசையும், சென்னையை சேர்ந்த சக்தி, செல்வின் 2வது பரிசையும், ஏற்காடு பகுதியை சேர்ந்த விக்ரம், பிரவீன் 3ம் பரிசையும் தட்டிச் சென்றனர். இதேபோல் பெண்களுக்கான இரட்டையர் பிரிவில், ஏற்காட்டை சேர்ந்த கரோலின் சில்வியா, திவ்யா முதல் பரிசையும், கடலூரை சேர்ந்த பார்கவி, ஜீவிதா 2ம் பரிசையும், ஈரோட்டை சேர்ந்த ஐஸ்வர்யா, வடிவு 3ம் பரிைசையும் பெற்றனர். தம்பதியருக்கான இரட்டையர் பிரிவில் கரூரை சேர்ந்த முத்து பழனியப்பன்கவிதா முதல் பரிசையும், கன்னியாகுமரியைச் சேர்ந்த செல்வகுமார்பிரியதர்ஷினி 2ம் பரிசையும், பெங்களூருவை சேர்ந்த நவீன்தேஜு 3ம் பரிசையும் தட்டிச்சென்றனர்.