சேலம் சூரமங்கலம் உழவர் சந்தை அருகே உள்ள அம்மா உணவகத்தில் அருள் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கு சாப்பிட்டு கொண்டிருந்தவர்களிடம் சாப்பாடு நன்றாக உள்ளதா? என கேட்டறிந்தார். மேலும் அவர் அங்கு உணவு வாங்கி சாப்பிட்டார். பின்னர் அங்கிருந்த மகளிர் குழு நிர்வாகிகளிடம் உணவு தரமாக உள்ளதாகவும், தினமும் இதுபோலவே வழங்க வேண்டும் என்றும் எம்.எல்.ஏ. கூறினார். இதையடுத்து உணவகத்திற்கு தேவைகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார். இதற்கு பணியாளர்கள் சமையல் பாத்திரங்கள், அடுப்பு, சாப்பிடும் தட்டு ஆகியவை கூடுதலாக வேண்டும். பழுதடைந்த சமையலறை மேற்கூரை சீரமைக்க வேண்டும் என்று கூறினர். இதையடுத்து அருள் எம்.எல்.ஏ. உடனடியாக ஆணையாளரை தொடர்பு கொண்டு அம்மா உணவகத்தை சீரமைத்து கொடுக்குமாறு கேட்டு கொண்டார். மேலும் அவர், தன்னுடைய சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இதை சீரமைக்க வாய்ப்புள்ளதா? என கூடுதல் கலெக்டரை தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். தினமும் காலை, மதியம் ஆகிய 2 வேளையும் சேர்த்து 250-க்கும் மேற்பட்டவர்கள் சாப்பிடும் இந்த அம்மா உணவகத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.