கோயில் விழாவுக்கு தடை பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
கோயில் விழாவுக்கு தடை: கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்;
இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிகழ்ச்சி நடத்தும் இடத்தை திமுக கிளைச் செயலாளர் குணசேகரன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 5 நபர்கள் இணைந்து டிரஸ்ட் இடம் என்று கூறுவதை எதிர்த்து திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திண்டுக்கல், பள்ளப்பட்டி கிராமம், பூதமரத்துப்பட்டி பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான காளியம்மன், மாரியம்மன், பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயில் திருவிழா கடந்த 20ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. மேலும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான வள்ளி திருமணம் என்னும் பூரண நாடகம் கோயில் முன்பாக அமைந்துள்ள சிங்கார கலையரங்கில் நடைபெறும். ஆனால் தற்போது திமுக கிளைச் செயலாளர் குணசேகரன் குடும்பத்தைச் சேர்ந்த 5 நபர்கள் சேர்த்து தனியாக டிரஸ்ட் ஒன்றை இரண்டு வருடத்திற்கு முன்பு உருவாக்கி தற்போது கோயில் பெயரில் உள்ள சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் கோயில் நாடகம் மேடை அமைக்கும் இடத்தை தங்களது இடம் என கூறி வருகின்றனர். தற்போது திருவிழாவிற்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் ஐந்து பேர் இணைந்து பிரச்சனை செய்து வருகின்றனர் எனக் கூறி 50க்கு மேற்பட்ட பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.