உத்தமசோழபுரம் வெட்டாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணி
இத்திட்டம் ஒட்டுமொத்தமாக இயற்கைக்கு புறம்பானது - பி.ஆர்.பாண்டியன்;
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரத்தில், தடுப்பணை அமைக்கும் பணியை, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிஆர்.பாண்டியன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது காவிரி டெல்டாவில் பாசனம் மற்றும் வடிகால் ஆறுகளில் ஒன்றான வெட்டாற்றின் குறுக்கே கடல் பரப்பிலிருந்து 7.50 கிமீ தொலைவில் மேல் நோக்கி கதவணை அமைக்கப்படுகிறது. இத்திட்டம் ஒட்டுமொத்தமாக இயற்கைக்கு புறம்பானது. குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் கடல் மட்டம் உயர்ந்து, நிலமட்டம் தாழ்நிலைக்கு சென்றுள்ளது. இதனால், கடலில் கலக்கும் வடிகால் ஆறுகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் கடல் நீர் உட்புகுந்து பாதித்து வருகிறது. எனவே, கடல் முகத்துவார நதிகள் மறு சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என்ற அவசியம் கருதி, கடந்த 2016 -ம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் ௹.960 கோடி பெற்று அரிச்சந்திரா அடப்பாறு, பாண்டவையாறு, வளவனாறு, உள்ளிட்ட நதிகள் சீரமைக்கப்பட்டது. கடல் நீர் உட்புகுவதை தடுத்து அமைக்கப்பட்ட அனைத்து கதவணைகளும் கடல் அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளது. உத்தமசோழபுரத்தில் மட்டும் கடல் பரப்பிலிருந்து ஏழரை கிலோ மீட்டர் மேலே அமைக்கப்படுவதால் கடல் நீர் உட்புகும் பேராபத்து ஏற்பட்டு இருக்கிறது. இதனை தடுத்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி மாற்று இடத்தை தேர்வு செய்கிறார்கள். அவ்விடத்தில் மண் வகை கட்டுமானத்திற்கு எதிராக உள்ளது என்று பொய்யான பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மேற்கொள்கிறார்கள். பொதுமக்கள் குறிப்பிடும் இடத்தின் அருகே மூன்று உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் அருகில் சிபிசிஎல் நிறுவனம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதிக சுமை கொண்ட கட்டிடங்கள் கட்டப்படுகிற போது கதவணை கட்ட இயலாது என்று இயற்கைக்கு புறம்பாக, அரசின் கொள்கைக்கு முரணாக, கதவணை அமைப்பதை ஏற்க இயலாது. மாவட்ட ஆட்சியரின் அலட்சியத்தால் உரிய கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்படாததால் அரசு பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. மாவட்ட ஆட்சியரின் அறிக்கை அவரது பொறுப்பற்ற தன்மையையும், மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் வகையிலும், நீர் பாசனத்துறையும், விவசாயிகளும் மோதிக் கொள்ளும் நிலையை ஏற்பட்டுள்ளது. காவல்துறையை குவித்து வைத்து போர்க்களம் போல அமைதியின்மை காணப்படுகிறது. உரிமைக்காக போராடும் மக்கள் மீது அடக்குமுறை மேற்கொள்வதையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. இது குறித்து முதலமைச்சர் உயர்மட்ட குழு அமைத்து, மக்கள் கருத்தறிந்து, அவர்கள் குறிப்பிடும் இடத்தில் மாற்றி கதவணை அமைக்க அனுமதி வழங்க வேண்டும். மிகப்பெரும் நிதிச் சுமை உள்ள நிலையில் 50 கோடி ரூபாய் தொகையை ரத்து செய்வதும் இயலாது. அதே நேரத்தில் இந்தத் தொகையால் உருவாக்கப்படுகிற கதவணையால் எந்த பயனும் இருக்காது. மாறாக பேரழிவை சுமார் 30 கிராமங்களைச் சார்ந்த மக்களும், விவசாயிகளும் சந்திக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்து, உயர்மட்ட குழு ஆய்வு செய்து பொதுமக்கள் குறிப்பிடும் இடத்தில் பணியினை மாற்றி கதவனைப் பணிகளை தொடங்க வேண்டும். இல்லையேல் கடல் முகத்துவார நதிகள் மூலம் எதிர்காலத்தில் காவிரி டெல்டா பேரழிவை சந்திக்கும் நிலை ஏற்படும் என்பதை முதலமைச்சர் உணர்ந்து செயல்பட முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது, மாநில அமைப்பு செயலாளர் எஸ்.ஸ்ரீதர் மற்றும் பலர் உடனிருந்தனர்.