அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் நாளை அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்படும்
மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு;
நீலகிரி மாவட்டத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் நாளை அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்படுவதாகவும், உதகை கூடலூர் தேசிய நெடுஞ்சாலைகள் இரவு நேர போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு உதகையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நீலகிரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து பலத்த காற்றுடன் கூடிய தொடர் கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டும், மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் நீலகிரி மாவட்டத்தில் அதிமுக அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு, செய்தியாளர்களிடம் பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதி கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உதகை கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தவளை மலை பகுதியில் இன்று பாறை விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு பாறை 30 அடி உயரத்தில் விழும் அபாயம் இருப்பதால் இச்சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு பேருந்துகள் காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இயக்கப்படும் எனவும், அவசர தேவைகளுக்கான ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு துறை வாகனங்கள் மற்றும் இயக்கப்படும் எனக் கூறினார். மேலும் பேசிய அவர், அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து சுற்றுலா தளங்களும் இரண்டு நாட்கள் மூடப்படுவதாகவும், முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாம் மற்றும் கோடநாடு காட்சி முனை ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அனுமதி அளிப்பது குறித்து வனத்துறையினர் முடிவெடுப்பார்கள் என அவர் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், நீலகிரி மாவட்டத்தில் அபாயகரமான மரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வெட்டி அகற்றப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். பேட்டி: லட்சுமி பவ்யா தண்ணீரு, மாவட்ட ஆட்சித் தலைவர்