ஆடு மேய்க்க சென்ற பெண் கிணற்றில் தவறி விழுந்து பலி
நத்தம் அருகே ஆடு மேய்க்க சென்ற பெண் கிணற்றில் தவறி விழுந்து பலி. மூன்று மணி நேரம் போராடி சடலத்தை மீட்ட தீயணைப்பு வீரர்கள்;
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காக்காபட்டியை சேர்த்தவர் முருகேசன் மனைவி சின்னபொண்ணு (வயது 48).இவர் நத்தம் கீழத்தெரு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் ஆடு மேய்க்க சென்றுள்ளார். அப்போது ஆடுகள் குடிப்பதற்காக அப்பகுதியில் தரைத்தளத்தில் இருந்த கிணற்றில் குடத்தின் மூலம் தண்ணீர் எடுக்க முயன்ற போது கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். தண்ணீர் எடுக்கச் சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் திரும்பாததால் இவருடன் ஆடு மேய்க்க சென்ற அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கிணற்றின் அருகே சென்று பார்த்தபோது கிணற்றுக்குள் சின்ன பொண்ணு தவறி விழுந்தது தெரியவந்தது. இது குறித்து நத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் ஆழம் அதிகமாக இருந்ததால் நீரை வெளியேற்றும் பணியில் நத்தம் பேரூராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டனர். பின்னர் சுமார் 3 மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இருந்த சின்னப்பொன்னின் சடலத்தை கயிறு உதவியுடன் மீட்டனர். இறந்தவர் உடலை கைப்பற்றிய நத்தம் போலீசார் உடற்கூறாய்விற்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆடு மேய்க்கச் சென்ற பெண் கிணற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.