வாலாஜா அருகே லாரி சக்கரத்தில் சிக்கி கர்ப்பிணி பலி
லாரி சக்கரத்தில் சிக்கி கர்ப்பிணி பலி;
வாலாஜாவை அடுத்த தென்கடப்பந் தாங்கல் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் அலுவலராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி மை சுமதி என்ற சுஜாதா (வயது 32). இவர்களுக்கு 10 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சுஜாதா, தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளதால் மருத்துவமனையில் அவ்வப்போது பரிசோதனைகளுக்கு சென்று வந்தார். வழக்கம்போல் இவரை நேற்று காலை கணவர் ஜெயக்குமாரின் தம்பி மனைவியான நவ்சில் ரிஸ்வானா, வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஸ்கூட்டரில் அழைத்துச் சென்று கொண்டிருந்தார். தென்கடப்பந்தாங்கல் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் கடந்த சில மாதங்களாகவே சாலை விரிவாக்க பணிகள் நடை பெற்று வருவதால் இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை அனைத்தும் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் சென்று வருகிறது. இந்த நிலையில் சர்வீஸ் சாலையில் இவர்கள் சென்றபோது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரி ஒன்று இவர்கள் வந்த வாகனம் மீது உரசியது. இதில் நிலை தடுமாறி சுஜாதா மற்றும் நவ்சில் ரிஸ்வானா ஆகியோர் ஸ்கூட்டரிலிருந்து சாலையில் விழுந்துள்ளனர். அப்போது சுஜாதா மீது கன்டெய்னர் லாரி ஏறி இறங்கியதில் வயிற்றில் உள்ள சிசுவுடன் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த நவ்சில்ரிஸ்வானாவை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.வாலாஜாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுஜாதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.