நாகை மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு - மாணவர்களை திலகமிட்டு வரவேற்ற ஆசிரியைகள்
பள்ளி திறந்த முதல் நாளே பாட புத்தகங்கள் அனைத்தும் வழங்கப்பட்டதால் மாணவர்கள் மகிழ்ச்சி;
நாகை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் நேற்று கோடை விடுமுறைக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்திற்குட்பட்ட 68 பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு திறக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக, வலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் முரளி தலைமையில், ஆசிரியைகள் ஆரத்தி எடுத்தும், நெற்றியில் வெற்றி திலகமிட்டும் உற்சாகமாக வரவேற்றனர். ஒன்றாம் வகுப்புக்கான புதிய மாணவர் சேர்க்கை நடைபெற்றது. பெற்றோர்களுடன் வந்த மாணவர்களை பள்ளியில் சேர்த்துக் கொண்ட ஆசிரியர்கள், உடனடியாக அவர்களுக்கு பாட புத்தகங்களை வழங்கினர். மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது குறித்து மாணவ, மாணவிகள் கூறியதாவது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு, நண்பர்களை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்ததாகவும், முதல் நாளிலேயே பாட புத்தகங்கள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் அய்யப்பன், சேவுராஜன், புஷ்பா, கணேசன், புவனா, கீர்த்தனா, தன்னார்வ ஆசிரியை விஜயபாரதி ஆகியோர் மாணவர்களை வரவேற்று பாடங்களை நடத்தினர்.