சாதிப்பதற்கு எந்த ஒரு சூழ்நிலையும் தடை இல்லை: ஆட்சியர் அறிவுரை.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் சாதிப்பதற்கு எந்தஒரு சூழ்நிலையும் ஒருபோதும் தடையாக இருக்காது என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் பேசினார்.;
மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் சாதிப்பதற்கு எந்தஒரு சூழ்நிலையும் ஒருபோதும் தடையாக இருக்காது என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் பேசினார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில் இன்று (04.06.2025), மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆர்வமுடன் பயின்று 2024-25ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுடன் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கலந்துரையாடி, தொழிற்கல்விப் படிப்புகள், கலை மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகள், தொழில்நுட்பக் கல்வி, தொழிற்பயிற்சி கல்வி படிப்புகள், கல்லூரிகள் தேர்வு, வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்த உரிய வழிகாட்டுதல்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்ததாவது: மாணவ, மாணவியர்களிடையே உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டுமென்று என்ற நோக்கில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ‘பெரிதினும் பெரிது கேள்” என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 206 பள்ளிகளிலிருந்து 2024-25ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள அனைத்து மாணவர்களையும் மதிப்பெண்களுக்கு ஏற்றவாரு உயர்கல்வியில் சரியான பாடப்பிரிவில் சேர்வதை உறுதிசெய்வது, அந்த மாணவர்கள் அனைவருக்கும் என்னென்ன விதமான படிப்புகள் உள்ளது, எவ்வளவு மதிப்பெண் பெற்றிருந்தால் எந்தெந்த மாதிரியான படிப்புகளில் சேரமுடியும். அதற்கு எந்தெந்த வழிகளிலெல்லாம் விண்ணப்பிக்கலாம் போன்ற விவரங்களையெல்லாம் பள்ளி தலைமையாசிரியர்கள், உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு தெரிவித்து அந்த தகவல்களையெல்லாம் மாணவர்களுக்கு தெரியப்படுத்தி உயர்கல்வி வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறார்கள். கல்வி கற்பதற்கு பொருளாதாரம் ஒருபோதும் தடையாக இருந்துவிடக்கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு மாணவர்களின் நலன்காக்கும் வகையில் பல்வேறு முன்மாதிரியான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், மாணவ, மாணவியர்களிடையே உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் கல்லூரிக் கனவு, உயர்வுக்குப்படி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாக மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களாகிய நீங்கள் உங்களுடைய குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலைகளையெல்லாம் நன்கு அறிந்து ஆர்வமுடன் பயின்று பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளீர்கள். இந்த காலகட்டம்தான் உங்களுடைய வாழ்க்கை தீர்மானிக்கக்கூடிய காலகட்டமாகும். மாணவர்கள் ஒவ்வொருவரும் மிகச் சரியான பாதையினை தேர்ந்தெடுத்து, படிக்க வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் சாதிப்பதற்கு குறைபாடு ஒருபோதும் தடையாக இருக்காது. அனேக மாற்றுத்திறனாளிகள் பல்வேறு துறைகளில் சாதித்துள்ளார்கள். கல்லூரி படிப்புகள் படிக்கும் போது உங்களுக்கு பல்வேறு அனுபவங்கள் கிடைக்கும். மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு சென்று யாருடைய எதிர்பார்ப்பும் இல்லாமல் சமுதாயத்தில் சுயமாக வாழ வேண்டுமென்ற நோக்கில்தான் உங்களுக்கு பல்வேறு வழிகளிலும் உரிய உயர்கல்வி வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறோம். மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் மனம்தளராமல் உயர்கல்வி பயின்று வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். குறைவான கல்விக் கட்டணத்தில் தரமான கல்வி எங்கு கிடைக்கிறது என்பதை முழுமையாக ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும். நீங்களெல்லாம் ஆகச்சிறந்த மதிப்பெண்கள் எடுத்துள்ளீர்கள். ஆகையால், அரசு கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், ஐ.டி.ஐ போன்றவற்றில் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும். அதுமட்டும்மல்லாமல், ஒரு சில மாணவர்கள் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்விப் படிப்புகள் படிப்பதற்கு தகுதியாகவுள்ளீர்கள். எனவே, அந்த மாணவர்கள் எல்லாம் தவறாது விருப்பமுள்ள தொழிற்கல்விப் படிப்புகளுக்கு கலந்தாய்வு மூலமாக குறைந்தது 5 பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பாக, தொழிற்கல்விப் படிப்புகள், கலை மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகளை தமிழ்வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் இடஒதுக்கீடு உள்ளது. மேலும், அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இடஒதுக்கீடு மூலம் தொழிற்கல்லூரிகளில் சேரக்கூடிய மாணவர்களுடைய அதாவது, பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்விப் படிப்புகளுக்கு ஆகக்கூடிய செலவு, கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், கலந்தாய்வுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்கிறது. மேலும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் உயர்கல்வி சேர்க்கையில் 5 சதவீதம் இடஒதுக்கீடும் உள்ளது. அதையும் நீங்கள் கண்டிப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதுமட்டும்மல்லாமல், மாணவ, மாணவியர்களிடையே உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த ஊக்கத்தொகையை மாணவர்கள் கல்வி சார்ந்த செலவினங்களுக்கு முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாணவர்களின் பெற்றோர்கள் ஒவ்வொருவரும் மாணவ, மாணவிகளுக்கு இந்தநேரத்தில் உறுதுணையாக இருந்து வாழ்க்கையில் வெற்றி பெற வழிவகை செய்ய வேண்டும். பொதுவாக அனேக மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்தில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக ஆகச்சிறந்த இடங்களுக்குச் சென்று சாதித்துள்ளார்கள். அதையெல்லாம் நீங்கள் மனதில் வைத்துக்கொண்டு, உயர்கல்வியில் சேர்ந்து நல்லமுறையில் கல்வி பயின்று, தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். வழிகாட்டி ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவர்களுக்கு உரிய உயர்கல்வி வழிகாட்டுதல்களை வழங்கி, மதிப்பெண்களுக்கு ஏற்றார்போல் சரியான கல்லூரிகள், பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்துள்ளார்களா என்பதை ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். உங்களுடைய குடும்ப பொருளாதார சூழ்நிலையை கருத்திற்கொண்டும், ஒவ்வொரு மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டும் மாணவர்கள் கல்வி கற்பதற்குத் தேவையான உதவிகளை செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் முழுமுயிற்சி எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். எனவே, ஒவ்வொரு மாணவர்களும் தங்களது மதிப்பெண்களுக்கு ஏற்றார்போல் பாடப்பிரிவுகளை தேர்வுசெய்து, உயர்கல்வியில் நன்கு பயின்று வாழ்க்கையில் வெற்றி பெற்று, யாருடைய எதிர்பார்ப்பும் இல்லாமல் சுயமாக வாழ வேண்டும் என அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்தார். மேலும், கல்லூரிகள் தேர்வு, பாடப்பிரிவுகள் தேர்வு, உயர்கல்விக்கு விண்ணப்பிப்பது உள்ளிட்ட உயர்கல்வி தொடர்பாக ஏதேனும் சந்தேகம் ஏற்படும்பட்சத்திலும் கட்டுப்பாட்டு அறையின் 93846 97546 மற்றும் 97888 59175 ஆகிய கைபேசி எண்களில் தொடர்புகொண்டு பயன்பெறலாம். இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், வழிகாட்டி ஆசிரியர்கள், மாணவ - மாணவியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.