மாநகராட்சி அலுவலகத்தில் இலவச மருத்துவ முகாம்.
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா முறையில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.;
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை மூன்றாவது தளத்தில் மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், ஆகியோர் துவக்கி வைத்து பார்வையிட்டார்கள். மதுரை மாநகராட்சியின் சார்பில் பொது சுகாதாரத்துறையின் கீழ் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், மக்களை தேடி மருத்துவம் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நியூ லைப் மருத்துவமனை மற்றும் மேக்ஸி விஷன் கண் மருத்துவமனை இணைந்து மதுரை மாநகராட்சி ஐந்து மண்டலங்கள், மற்றும் மைய அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் உடல் நலனை காக்கும் பொருட்டு முழு உடல் பரிசோதனை மேற்கொள்வதற்கான சிறப்பு மருத்துவ முகாம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அறிஞர் அண்ணா மாளிகை மூன்றாவது தளத்தில் சிறப்பு மருத்துவ முகாமினை , மேயர், ஆணையாளர் ஆகியோர் துவக்கி வைத்து பரிசோதனைகள் மேற்கொள்வதை பார்வையிட்டார்கள். இம்மருத்துவ முகாமில், பொது மருத்துவம், பெண்கள் சிறப்பு மருத்துவம், நுரையீரல் சிறப்பு மருத்துவம் மற்றும் கண் மருத்துவம் மற்றும் இரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை, ஹீமோகுளோபின் பரிசோதனை, கொலஸ்ட்ரால் பரிசோதனை, யூரியா பரிசோதனை, கிரியாட்டினீன் பரிசோதனை, இ.சி.ஜி. பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனை, மார்பக பரிசோதனை, கர்ப்பவாய் பரிசோதனை, சளி பரிசோதனை, நுரையீரல் பரிசோதனை ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. மருத்துவர்கள் பணியாளர்களுக்கு பரிசோதனை செய்து நோயை கண்டறிந்து மேல் சிகிச்சை தேவைப்படுவோர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. இம்மருத்துவ முகாம் காலை 10 மணி முதல் 4 மணி வரை நடைபெற்றது. இம்முகாமில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் என சுமார் 285 நபர்கள் பரிசோதனை மேற்கொண்டனர். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பசுமையை பறைசாற்றும் வகையில் அறிஞர் அண்ணா மாளிகை வளாகத்தில் பசுமை மரக்கன்றுகளை மேயர், ஆணையாளர் ஆகியோர் நட்டு வைத்தார்கள். இம்முகாமில், மண்டலத் தலைவர்கள் சரவணபுவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, சுகாதாரக்குழுத் தலைவர் ஜெயராஜ், துணை ஆணையாளர் ஜெய்னுலாபுதீன். நகர்நல அலுவலர் மரு.இந்திரா, உதவி நகர் நல அலுவலர் மரு.அபிஷேக், முதன்மை மருத்துவ அலுவலர் மரு.ஸ்ரீகோதை, உதவிப்பொறியாளர் அமர்தீப், மருத்துவர்கள், செவிலியர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.